படப்பிடிப்புக்கு தினமும் லேட்டா வந்த பத்மினி!.. ஸ்ரீதர் செய்த தில்லாலங்கடி டெக்னிக்..
தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளியாக திகழ்ந்தவர் நடிகை பத்மினி. நடனத்தில் கைதேர்ந்தவர். நடிப்பில் இளவரசியாக மின்னியவர். எந்தவொரு கவர்ச்சியும் காட்டாமல் சினிமாவில் கோலோச்சியவர். சிவாஜி, எம்ஜிஆர் என முன்னனி நடிகர்களுடன் இணைந்து மக்கள் மத்தியில் இவருக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தனக்காக அங்கீகாரத்தை பெற்றவர். நடிகைகளிலேயே ரஷ்ய மொழியில் நடித்த முதல் நடிகையாக பத்மினிதான் விளங்கினார்.
இதையும் படிங்க : பாலசந்தரோ? பாரதிராஜாவோ இல்லங்க… கோலிவுட்டில் முதல் தேசிய விருது இயக்குனர் இவர்தான்..
மேலும் சிவாஜியுடன் மட்டும் சேர்ந்து கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதனாலேயே ரசிகர்கள் சிவாஜி - பத்மினியை ஒரு ராசியான ஜோடி என்றே அழைத்தனர். இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதருக்கும் பத்மினிக்கும் இடையே ஒரு இனம் புரியாத நட்பு இருந்து வந்ததாம்.
ஸ்ரீதரின் இயக்கத்தில் பத்மினி நடிப்பில் வெளியான எதிர்பாராதது என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அதன் காரணமாகவே ஸ்ரீதரின் தயாரிப்பில் வெளியான அமர தீபம் என்ற படத்திற்காக பத்மினி முன்பணம் வாங்காமலேயே நடித்தாராம்.
அதில் நடித்த சிவாஜியும் முன்பணம் வாங்காமல் தான் நடித்தாராம். இந்தளவுக்கு ஸ்ரீதர் மீது அதிக நட்பு கொண்டவராக இருந்திருக்கிறார் பத்மினி. ஆனால் இந்த நட்புக்கு இடையிலேயும் தொழிலை விட்டுக் கொடுக்காதவராகத்தான் இருந்திருக்கிறார் ஸ்ரீதர்.
ஒரு சமயம் மீண்ட சொர்க்கம் என்ற படத்தில் பத்மினி நடிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு நாள்தோறும் தாமதமாகவே வந்திருக்கிறார் பத்மினி. இதை பல நாள் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் அவரது உதவியாளர்களிடம் சொல்லியும் பத்மினி அதே காரியத்தை தான் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பிரபல இயக்குனர்… கடுப்பாகி ஆப்பு வைத்த உலக நாயகன்…
இவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக மறு நாள் படப்பிடிப்பில் காத்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது பத்மினி 10, 12 மணி ஆகியும் வராமல் மேக்கப் அறையில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தாராம். உடனே ஸ்ரீதர் தன் உதவியாளர்களை அழைத்து கோலி வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு பத்மினி செட்டுக்கு வர அங்கு ஸ்ரீதர் உட்பட அனைவரும் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களாம். அதை பார்த்ததும் பத்மினி என்ன எல்லாரும் கோலி விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க, அதற்கு ஸ்ரீதர் உங்களுக்காக காத்திருந்து போர் அடித்து விட்டது. அதனால் தான் கோலி விளையாடிக் கொண்டிருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
உடனே பத்மினி புரிந்து கொண்டு மறு நாளில் இருந்து படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாராம். முகத்துக்கு எதிராக கூறாமல் இப்படி நாசுக்காக சொல்லி புரிய வைத்த ஸ்ரீதரின் பெருந்தன்மை யாருக்குத்தான் வரும்.