அடப்பாவி என்னடா இப்படி பண்ணிட்ட!...பாரதிராஜாவை புலம்பவிட்ட வெற்றிமாறன்...
சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சூரி இதில் கதாநாயகனாக வருகிறார். அதுவும் போலீஸ் ரோலில். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடையாத காரணத்தால் “விருமன்”, “டான்” போன்ற திரைப்படங்களில் மட்டும் சூரி தோன்றினார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகின.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” என்ற சிறுகதையை தழுவித்தான் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரு பொதுவுடைமைவாத போராளியை என்கவுண்ட்டர் செய்யப்போகும் போலீஸுக்கும் அந்த போராளிக்கும் நடக்கும் உரையாடலே அந்த சிறுகதை. இதனை சினிமாவிற்கு ஏற்றார் போல் விறுவிறுப்பை கூட்டி வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாணியில் தான் அவர் “அசுரன்” திரைப்படத்தையும் இயக்கினார். “விடுதலை” திரைப்படத்தில் போராளியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் “அசுரன் படத்திற்கு பின் நான் இயக்கப்போகும் படத்தில் சூரி தான் கதாநாயகன் என அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஆதலால் சூரிக்கு தகுந்தவாறே அதன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்தேன். ஆனால் வாத்தியார் என்ற ரோலுக்கு நான் முதலில் பாரதிராஜாவைத்தான் அணுகினேன். அவருக்கு முடி எல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்தேன். ஆனால் இந்த கதாப்பாத்திரத்திற்கு இவர் சரிவருவாரா என ஒரு சந்தேகம் எழுந்தது. ஆதலால் அவரிடம் இதனை கூறினேன். அதற்கு அவர் ‘இப்படி முடி எல்லாம் வெட்டிவிட்டுட்டு இப்போ வேணாம்ன்னு செல்றியேடா, இப்படி பண்றியே டா’ என்று என்னை திட்டினார். அதன் பின் தான் விஜய் சேதுபதியிடம் சென்றேன்” என கூறினார்.