Cinema History
டைட்டிலை கேட்ட வெற்றிமாறன்.. கொடுக்க மறுத்த ஹரி.. அட அந்த படத்துக்கா?!..
இயக்குனர் வெற்றிமாறன், பேட்டி ஒன்றில் இயக்குனர் ஹரி உடன் தனது உரையாடல் குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, ‘பாவக்கதைகள் (ஒரு பகுதி)’ படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து “விடுதலை” படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் இந்த இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் “சி சு செல்லப்பா” எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” & “விடுதலை” படங்களும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் “வாடிவாசல்” படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில், “ஆடுகளம் படத்திற்கு முதலில் சண்டைக் கோழி என பெயரிடப்பட்டது. ஆனால் லிங்குசாமி இயக்கத்தில் அதே பெயரில் படம் வெளியாகி விட்டதால் சேவல் என தலைப்பு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தலைப்பை பதிவு செய்ய போகும் போது அந்த தலைப்பு இயக்குனர் ஹரியிடம் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இயக்குனர் ஹரியை தொடர்பு கொண்டு சேவல் தலைப்பை தருமாறு கேட்ட போது, “குல தெய்வம் கோயிலில் வைத்து வழிபாடு செய்து பூஜை போட்டு விட்டேன். இல்லையெனில் பட தலைப்பை கொடுத்து விடுவேன்.” என ஹரி கூறியதாகவும் பின்னர் களம் என தலைப்பு வைத்ததாகவும் பிறகு ஆடுகளம் என தலைப்பு இறுதி செய்யப்பட்டது. ஆடுகளம் தலைப்பு தனுஷ்க்கு மிகவும் பிடித்தது.” என்றும் வெற்றிமாறன் பேசியுள்ளார்.