அதெல்லாம் கண்ட்றாவியான சீன்ஸ்!. ஆனா வேற வழியில்ல!.. வெற்றிமாறன் ஓப்பன் டாக்!..

by சிவா |   ( Updated:2023-03-09 21:36:38  )
vetri
X

vetri

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யர் இவர். பாலுமகேந்திராவிடம் பாடம் படித்ததால் தன்னுடைய ஒவ்வொரு படைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுப்பவர். அதனால்தான் மிகவும் குறைவான திரைப்படங்களை இயக்கியிருந்தும், சிறந்த இயக்குனராக ரசிகர்களாலும், திரையுலகாலும் கருதப்படுபவர்.

பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடித்து ஆடியவர். தனுஷை வைத்து மட்டுமே 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில், ஆடுகளம், அசுரன் இரண்டு படத்திற்கும் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். தற்போது வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இப்படத்தில் இதுவரை இல்லாத சீரியஸான வேடத்தில் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஆடியோ விழா தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியஸாக படம் எடுக்கும் வெற்றிமாறன் திரைப்படங்களில் காமெடி காட்சிகள் எப்போதும் இருக்காது. தனக்கு காமெடி வராது என அவரே ஒத்துக்கொண்டுள்ளார். இதுபற்றி ஒருபேட்டியில் கூறியுள்ள வெற்றிமாறன் ‘பொல்லாதாவன் திரைப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல கண்ட்றாவியான காட்சிகள் அதில் இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவை நல்ல காட்சிகள் இல்லை என்பது என் எண்ணம். கதையோடு சேர்ந்து காமெடி வருவது எனக்கு சம்மதம்.

pollaadhavan

ஆனால், தனி காமெடியில் எனக்கு உடன்பாடு இல்லை. பொல்லாதவன் என் முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் சொன்னதை நான் கேட்க வேண்டியிருந்தது. சந்தானமும் - கருணாஸும் ஒரு காமெடியை உருவாக்குவார்கள். படப்பிடிப்பில் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால், நான் சீரியஸாக பார்த்துக்கொண்டிருப்பேன். அதைபார்த்த சந்தானம் ‘எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அதனால டைரக்டர் இத வைக்க மாட்டார். நாம வேற படத்துல இந்த காமெடியை வச்சிப்போம்’ என கருணாஸிடம் சொல்வார். அப்படி உருவான படம்தான் பொல்லாதவன்’ என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: எத்தனை பாடல்கள்?.. திருப்தியடையாத தலைவர்.. எம்.எஸ்.வியை அழ வைத்து அனுப்பிய எம்ஜிஆர்!..

Next Story