Arasan: மறுபடியும் முதல்லருந்து ஷூட்டிங்!.. வெற்றிமாறன் – சிம்பு குட் காம்பினேஷன்!..

Published on: January 20, 2026
arasan
---Advertisement---

பொல்லாதவன் படம் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் போன்ற படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியவர் வெற்றிமாறன். இவரின் படத்தில் கதாநாயகனை காட்டும் விதத்தைப் பார்த்து பல மொழிகளிலும் உள்ள நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே வெற்றிமாறன் நிறைய இடைவெளி விடுவார். மேலும், முழு கதையையையும் எழுதாமலேயே படப்பிடிப்பை நடத்துவார். மேலும் மற்ற இயக்குனர்கள் 6 மாதங்களில் எடுக்கும் படத்தை இவர் இரண்டு வருடங்கள் எடுப்பார். அதனால்தான் இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் யோசிக்கிறார்கள். வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்காமல் போனதற்கு கூட காரணம் இதுதான்.

விடுதலைப் படத்தில் வெறும் 8 நாட்கள் மட்டும் நடித்தால் போதும் என சொல்லி விஜய் சேதுபதியை கூட்டி வந்து பல மாதங்கள் நடிக்க வைத்தார். மாத கணக்கில் படப்பிடிப்பு நடத்துவார்.. அதை போட்டு பார்த்துவிட்டு ‘திருப்தியாக இல்லை.. மீண்டும் முதலில் இருந்து எடுப்போம்’ என்பார். நடிகர்கள் மிரண்டு போவார்கள்.. விஜய் சேதுபதி, சூரியெல்லாம் அப்படித்தான் விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களில் நடித்தார்கள்.

தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். கபடி வீரரான சிம்பு வடசென்னைக்கு வந்து ஒரு மோசமான ரவுடியாக மாறுவது போல கதையை வெற்றிமாறன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. பல பஞ்சாயத்துக்கு பின் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, கோவில்பட்டி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 26ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இதுவரை எடுத்ததை போட்டு பார்த்த வெற்றிமாறனுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். எனவே ஏற்கனவே எடுத்த சில காட்சிகளை மீண்டும் எடுப்போம் என சொல்ல சிம்பு மிரண்டு விட்டாராம்.

ஏனெனில் சிம்பு அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் நிலையில்தான் வெற்றிமாறன் பீதியை கிளப்பியிருக்கிறார். ஏற்கனவே சிம்பு ஒரு பக்கம் சரியாக ஷூட்டிங் வரமாட்டார் என்கிற பெயர் இருக்கிறது. வெற்றிமாறனும் வேறு மாதிரி குடைச்சல் கொடுப்பவர்.. இருவரும் சேர்ந்தால் குட் காம்பினேஷன் என சொல்லி சிரிக்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.