இந்த உண்மை சம்பவத்தைத்தான் வெற்றிமாறன் படமாக்கியுள்ளார்… சர்ச்சைக்குள் சிக்குமா விடுதலை?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற “வழிநெடுக காட்டுமல்லி”, “கல்லான காடு” ஆகிய பாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்க பாடல்களாக அமைந்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் பல பயங்கரமான காடுகள் இருக்கும் பகுதிகளான சிறுமலை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படக்குழுவினர் மிகவும் கடினமாக உழைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர் என்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் பேட்டிகளில் இருந்து தெரியவருகிறது.
குறிப்பாக சூரி, சமீபத்தில் அளித்து வரும் பேட்டிகளில், படப்பிடிப்பின்போது பல காட்சிகளில் அடிபட்டதாகவும், காட்டு பகுதிகளில் படமாக்கும்போது அங்குள்ள பாம்புகள், பூச்சிகளின் தொல்லைகள் இருந்ததாகவும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார்.
உண்மை கதை
“விடுதலை” திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது இது முழுக்க முழுக்க காவல்துறை சம்பந்தமான கதை என்று தெரியவந்தது. மேலும் இதில் சூரியும் போலீஸாக நடித்துள்ளார். போலீஸார்களின் அராஜகமாக போக்கை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” திரைப்படத்தை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைலரில் பழங்குடியின மக்கள் போலீஸாரால் துன்புறுத்தப்படுவது போல் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆதலால் இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன.
வாச்சாத்தி கலவரம்
இந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக ஒரு தற்போது தகவல் வந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய வாச்சாத்தி கலவரத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பழங்குடியினர் வசிக்கும் வாச்சாத்தி என்ற கிராமத்தில், அந்த பகுதி மக்கள் வீட்டிற்குள் சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினரும் வருவாய்துறையினரும் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் அந்த கிராமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், பல இளைஞர்களையும் சிறுவர்களையும் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் 12 பேருக்கு கடும்காவல் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கவிஞரை வற்புறுத்தி பக்தி பாடல் எழுத வைத்த குன்னக்குடி வைத்தியநாதன்… இப்படி ஒரு கதை இருக்கா?..