அதிகார வர்க்கத்திற்கு எதிரான சம்மட்டி அடி… வெற்றிமாறனின் தரமான சம்பவம்… விடுதலை திரை விமர்சனம்…

வெற்றிமாறன் இயக்கத்தில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம். இதில் சூரி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் சேத்தன், தமிழ், கௌதம் வாசுதேவ் மேனன், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படமாக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இன்று மிக ஆவலோடு இத்திரைப்படத்தை கண்டுகழித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை சற்று அலசலாம்.

கதை

அருமபுரி என்ற ஊருக்கே அருகே இருக்கும் மலை கிராமத்தில் சுரங்கம் அமைப்பதற்காக அரசு திட்டமிடுகிறது. அரசு சுரங்கம் அமைத்தால் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும் என்பதால் விஜய் சேதுபதி தலைமையில் திரண்ட ஒரு மக்கள் படை சுரங்கம் தோண்டுவதை எதிர்த்து வருகிறது.

இந்த மக்கள் படையையும் அதன் தலைவரான விஜய் சேதுபதியையும் பிடிக்க வேண்டும் என ஒரு சிறப்பு படை அந்த மலை கிராமத்திற்குள் நுழைகிறது. அந்த சிறப்பு படையில் ஜீப் டிரைவராக வருகிறார் சூரி.

போலீஸார் கண்களில் சிக்காமல் இருக்கும் விஜய் சேதுபதி பதுங்கி இருக்கும் இடத்தை ஒரு முறை சூரி பார்த்துவிடுகிறார். ஒரு நாள் இதனை தனது மேல் அதிகாரியிடம் சூரி சொல்ல, போலீஸ் அதிகாரிகள் சூரியுடன் அந்த இடத்திற்கு செல்கின்றனர். அங்கே விஜய் சேதுபதியை போலீஸார் பிடித்தனரா? இல்லையா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.

சூரியின் நடிப்பு

குமரேசன் என்ற ஜீப் டிரைவராக வரும் சூரி, மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இதற்கு முன் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் என்ற ஞாபகமே பார்வையாளர்களுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அனுபவம் பெற்றது போலவே நடித்துள்ளார். மலைவாழ் கிராமத்தில் வாழும் பெண்ணாக வரும் பவானி ஸ்ரீயை சூரி காதலிக்கிறார். அவருடனான காதல் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சூரி.

மாஸ் காட்டிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி சில காட்சிகளிலேயே வந்தாலும் அவரது பெர்பார்மன்ஸ் மெய் மறக்க செய்கிறது. பெருமாள் வாத்தியார் என்ற மக்கள் படைத்தலைவனாக மிரட்டலாக வலம் வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு காட்சிகளிலும் அப்ளாஸை அள்ளுகிறார்.

மற்ற நடிகர்கள்

அறிமுக நடிகையான பவானிஸ்ரீ, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார். மேலும் போலீஸ் அதிகாரிகளாக வரும் கௌதம் மேனன், சேத்தன், தமிழ் ஆகியோர் மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். இதில் குறிப்பாக சேத்தன், ஈவிரக்கம் இல்லாத ஒரு கடுமையான சுபாவம் கொண்ட போலீஸாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

சிறப்பான குழு

வேல்ராஜின் ஒளிப்பதிவு காடுகளின் பயங்கரத்தையும் அந்த நிலவியலில் நடக்கும் கலவரமான சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறது. ஆர்.ராமரின் ஒளிப்பதிவு நச். இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை

எப்போதும் தனது சிறப்பான திரைக்கதையின் மூலம் ரசிகர்களை வியக்கவைக்கும் வெற்றிமாறன், இத்திரைப்படத்திலும் அதே பாணியை கையாண்டிருக்கிறார். சிறிதும் கூட சலிப்புத்தட்டாமல் மிக விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். மைனஸ்கள் என்று எதுவும் குறிப்பிடும்படியாகவே இல்லை. அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். விடுதலை பாகம் 2 விஜய் சேதுபதிக்கான தளம் என்பது முதல் பாதியின் மூலம் கணிக்கமுடிகிறது. மொத்தத்தில் தனது பாணியிலான கதையில் மிக சிறப்பாக இறங்கி அடித்திருக்கிறார் வெற்றிமாறன்.

 

Related Articles

Next Story