நாடக கம்பெனியில் எடுப்பு வேலை பார்த்த நபர்… பின்னாளில் ஒரு லெஜண்டு… யார் தெரியுமா??
தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்க காலத்தில் பல நடிகர்கள் நாடகக் கம்பெனியில் இருந்து நடிகர்களாக வந்தவர்கள்தான். சிவாஜி, எம்ஜிஆர், பியு சின்னப்பா, தியாகராஜ பாகவதர் என இந்த பட்டியல் மிகவும் பெரியது. ஆனால் நாடகக் கம்பெனியில் சாதாரண எடுப்பு வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் பின்னாளில் பெரிய கதாசிரியராகவும் நடிகராகவும் வளர்ந்தவர் குறித்துதான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
யுஏஏ என்ற நாடக கம்பெனியை நடத்தி வந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியை பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஒரு நாள் அவர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவரது கார் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. காரை தள்ளிவிட்டால்தான் ஸ்டார்ட் செய்யமுடியும் என்ற நிலை. அங்கு இருந்த யாரும் அவருக்கு உதவவில்லை. அப்போது ஒரு நபர் அந்த காரை தள்ளிவிட்டார். அந்த நபர்தான் பின்னாளில் “வியட்நாம் வீடு” சுந்தரம் என்று அழைக்கப்பட்ட சுந்தரம்.
தனக்கு உதவிய சுந்தரத்தை தனது அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார் ஒய்.ஜி.பார்த்தசாரதி. அப்படித்தான் சுந்தரம் யுஏஏ நாடக கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். நாடகத்திற்கு வரும் பார்வையாளர்கள் அமரும் நாற்காலிகளை அடுக்கி வைப்பது, பூங்கொத்து எடுத்துக்கொண்டு போய் கொடுப்பது போன்ற மிகவும் சாதாரண வேலைகளையே பார்த்து வந்தார் சுந்தரம்.
அந்த நாடக கம்பெனியில் இவ்வாறு சாதாரண வேலைகளை பார்த்து வந்தாலும், பல நாடகங்களை பார்த்த அனுபவம்தான் அவரை “வியட்நாம் வீடு” என்ற கதையை எழுதவைத்தது. பின்னாளில் அது திரைப்படமாக உருவாகி வெற்றிபெற, “வியர்நாம் வீடு” என்ற பெயர் அவரது பெயருடன் இணைந்தது. அதன் பின் “ஞான ஒளி’, “கௌரவம்” என பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மேலும் பல திரைப்படங்களுக்கு வசனக்கர்த்தாவாகவும் விளங்கினார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் “வியட்நாம் வீடு” சுந்தரம் நடித்துள்ளார். இவ்வாறு பின்னாளில் தமிழ் சினிமாவின் லெஜண்டாக விளங்கினார்.
“வியர்நாம் வீடு சுந்தரம்” நாடக கம்பெனியில் வேலை பார்த்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர்தான் சோ.ராமசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.