20 வயசிலேயே விபத்து!.. இப்பவும் முகம் கோணலா மாறிடும்!. ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி...
பல வேலைகளை செய்து சவுண்ட் இன்ஜினியராக மாறி அப்படியே இசையமைப்பாளராகவும் மாறியவர் விஜய் ஆண்டனி. பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறினார். ‘நான்’ என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அப்படியே இவர் நடித்த அடுத்த 2 படங்களுமே வெற்றி பெற்றது. எனவே, தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
சொல்லாமலே சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன்பின் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் இவரின் நடிப்பில் பிச்சைக்காரன் 2 வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் ஒரு தீவில் நடந்தபோது படகை வேகமாக ஓட்டி அவருக்கு விபத்து ஏற்பட்டு முகத்தில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி ‘எனக்கு 20 வயது இருக்கும்போதே பைக் ஓட்டி கீழே விழுந்து முகத்தில் அடிபட்டது. அதன் விளைவாக இப்போதும் நான் சரியாக துங்கவில்லை எனில் என் முகமே கோணி விடும். அது எனக்கு மட்டுமே தெரியும். அது என்னவோ எனக்கு முகத்தில் மட்டுமே அடிபடுகிறது. ஆனால், இந்த முறை விபத்தில் சிக்கிய பின் நான் மிகவும் தன்னம்பிக்கை உடையவனாக இருக்கிறேன். புதிய தெம்பு வந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.