ரோமாஞ்சகம் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் கடந்து வந்த முக்கியமான நிகழ்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துகொண்ட அவர், தனது வாழ்க்கையே ஒரு த்ரில்லர் திரைப்படம் போல இருந்ததாக கூறியுள்ளார்.
2026-ம் ஆண்டு தனக்கு மிகவும் பரபரப்பான அனுபவம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, தனது வாழ்க்கையில் மது அருந்தும் பழக்கத்தை விட்டது, காதலில் விழுந்தது, காதல் பிரிந்தது என வாழ்க்கையில் பல திருப்பங்களை சந்தித்ததாகவும், இறுதியில் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த வெளிப்படையான பேச்சு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், தனது திரைப்பயணத்தில் முக்கியமான ஒருவரான இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா குறித்தும் விஜய் தேவரகொண்டா பேசினார். அதில், ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் உருவான நேரத்தில் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மீது வைத்த நம்பிக்கையையும், படத்தை உருவாக்க அவர்கள் எடுத்த ரிஸ்க்கையும் நினைத்து பார்த்த விஜய், சந்தீப்காக எதையும் செய்யத் தயார் என்ற அளவுக்கு தனது நன்றியை கூறினார்.
இதனிடையே, சந்தீப் ரெட்டி வங்கா தயாரிக்கும் ‘ரோமாஞ்சகம்’ திரைப்படம் செப்டம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் நடித்துள்ள இப்படத்தை டி. வேணு கோபால் ரெட்டி இயக்கியுள்ளார்.







