நடிகர் விஜய் எப்போது தனது படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை பேச தொடங்கினாரோ அப்போதே முதலே அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அரசியல் கட்சிகள் அவருக்கு குடைச்சல் கொடுப்பது தொடர் கதையாகிவிட்டது. தலைவா பட போஸ்டரில் Time to Lead என்கிற வாசகம் இடம் பெற்றிருந்ததால் அந்த படம் சொன்ன தேதிக்கு வெளியாகாமல் 2 நாட்கள் கழித்தே வெளியானது.
மெர்சல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜிஎஸ்டி பற்றி விஜய் வசனம் பேசினார் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சி அவரை கடுமையாக விமர்சித்தது. சர்க்கார் படத்தில் வரும் வில்லியின் கதாபாத்திரத்தின் பெயரை ஒரு அரசியல்வாதியோடு தொடர்புபடுத்தி அப்போதைய ஆளும் கட்சியினர் தியேட்டர்களில் அந்த படம் தொடர்பான பேனர், கட் அவுட்டுகளை சேதம் செய்தார்கள்.

விஜயின் புலி படம் வெளியான போது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மாஸ்டர் படத்திற்காக விஜய் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தபோது வருமான வரித்துறையினர் அங்கு நேரில் சென்று விஜயை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தார்கள். இப்படி அரசியல்ரீதியாக பல சிக்கல்களை விஜய் சந்தித்திருக்கிறார். அதுதான் அவரை அரசியலை நோக்கி தள்ளியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், இன்று இரண்டு சம்பவம் விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியிருக்கிறது ஒருபக்கம் அவரின் ஜனநாயகன் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு பக்கம் சம்மன்.. ஒரு பக்கம் ஜனநாயகன் படத்துக்கு சிக்கல் என தொடர் பிரச்சினைகளை விஜய் சந்தித்து வருகிறார்.
