“என் பேச்சை கேட்காம இப்படி செஞ்சிட்டான் சார்”… தயாரிப்பாளரிடம் விஜய்யை நினைத்து அழுது புலம்பிய எஸ்.ஏ.சி…
விஜய் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக உயர்ந்திருக்கிறார் என்றாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார்.
விஜய்யை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சிக்கு விருப்பமே இல்லையாம். விஜய் பள்ளி பருவத்தில் இருந்தபோதே தனது தந்தையிடம் “என்னை எப்போ ஹீரோ ஆக்கப்போறீங்க” என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஆனால் எஸ்.ஏ.சியோ கல்லூரி படிப்பை முடித்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறிவந்திருக்கிறார்.
விஜய் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே “என்னை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள்” என ஒற்றைக் காலில் நின்றாராம். ஆதலால் எஸ்.ஏ.சி தனது சொந்த தயாரிப்பில் விஜய்யை ஹீரோவாக வைத்து “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது. மேலும் பத்திரிக்கைகளில் விஜய்யை உருவகேலி செய்து பல கடுமையான விமர்சனங்களும் வெளிவந்தன.
அதன் பின் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த “செந்தூரப்பாண்டி” திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்தார். அத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் என்ற நடிகரின் முகத்தை சினிமா ரசிகர்களின் மனதில் பதியவும் வைத்தது அந்த திரைப்படம்.
எனினும் “செந்தூரப்பாண்டி” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்த “ரசிகன்”, “தேவா”, “விஷ்ணு”, போன்ற திரைப்படங்கள் அவ்வளவாக விஜயின் கேரியருக்கு கைக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில் எஸ்.ஏ.சி தனது மகனின் கேரியரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற நினைப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியிடம் சென்றாராம். அங்கே சௌத்ரியிடம் “என் மகனிடம் சினிமாவில் வந்து சிக்கிவிடாதே என்று பல முறை கூறினேன். ஆனால் அவன் என் பேச்சை கேட்கவில்லை. விஜய்க்கு சுத்தமாக நடிக்கத் தெரியவில்லை என பல பத்திரிக்கைகள் எழுதுகின்றன. ஆதலால் நீங்கள் விஜய்யை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும்” என கூறி கண்ணீர் விட்டாராம்.
இதனை பார்த்த சௌத்ரி, “நீங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என கூறினாராம். அதன் பின் சில நாட்கள் கழித்து சௌத்ரியிடம் இருந்து அழைப்பு வந்ததாம். உடனே எஸ்.ஏ.சி, சௌத்ரியின் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கே இயக்குனர் விக்ரமன் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த ஆண்டில் கோலிவுட்டில் நடந்த டாப் 5 தரமான சம்பவங்கள்… என்னென்னலாம் நடந்துருக்கு பாருங்க!!
விக்ரமனை எஸ்.ஏ.சிக்கு அறிமுகப்படுத்திய சௌத்ரி “இவர் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார். அந்த கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும்” என கூறினாராம். விக்ரமன், எஸ்.ஏ.சியிடம் அந்த கதையை கூற, அந்த கதை எஸ்.ஏ.சிக்கும் பிடித்துப்போய்விட்டது. இதனை தொடர்ந்துதான் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய “பூவே உனக்காக” திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினாராம் விஜய். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக விஜய் உருவானார் என்பது குறிப்பிடத்தக்கது.