விஜய்யை கைவிடாத பொங்கல் பண்டிகை.. அத்தனையும் வெறித்தனமான ஹிட்.. இப்படி ஒரு செண்ட்டிமென்ட்டா??
பண்டிகை நாட்கள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது புது திரைப்படங்கள்தான். அதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்தான்.
அந்த வகையில் தமிழின் மாஸ் ஹீரோவாக திகழும் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது. இந்த நிலையில் இதுவரை பொங்கல் பண்டிகைகளில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன விஜய் திரைப்படங்களை பார்க்கலாம்.
கோயம்பத்தூர் மாப்பிள்ளை:
1996 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் “கோயம்பத்தூர் மாப்பிள்ளை”. இதில் விஜய்க்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக இல்லாமல் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த காலக்கட்டத்தில் வெளிவந்த இத்திரைப்படம் விஜய்யின் கேரியல் முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரண்ட்ஸ்:
2001 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான “ஃப்ரண்ட்ஸ்” திரைப்படத்தில் விஜய்யுடன் தேவயானி, சூர்யா, ரமேஷ் கண்ணா என பலரும் நடித்திருந்தனர். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றைக்கும் மிகப்பிரபலமானவை. வடிவேலு ஏற்றுநடித்த காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாப்பாத்திரம் சமீபத்தில் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனதை நாம் பார்த்திருப்போம். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடி ஒரு முக்கிய பங்களித்தது என்று கூறினாலும் அது மிகையாகாது.
“ஃப்ரண்ட்ஸ்” திரைப்படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையான வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் இப்போதும் பலருக்கு விருப்பமான திரைப்படமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வசீகரா:
2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான “வசீகரா” திரைப்படம் “காதலுக்கு மரியாதை” திரைப்படத்திற்கு பின் விஜய் கேரியரில் ஒரு சிறந்த காதல் திரைப்படமாக அமைந்தது. விஜய் ஆக்சன் ஹீரோவாக வளர்ந்து வந்த காலத்தில் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரைப்படமாகவும் அமைந்தது. மேலும் விஜய் எளிய வேடத்தில் மிகவும் சிறப்பாகவும் நடித்திருப்பார். இதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
போக்கிரி:
2007 ஆம் ஆண்டு விஜய், அசின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “போக்கிரி” திரைப்படம் விஜய்யின் மாஸ் ஹீரோ ரேஞ்சை அப்படியே தூக்கி நிறுத்தியது. இத்திரைப்படத்துடன் அஜித் நடித்த “ஆழ்வார்” திரைப்படம் போட்டிபோட்டது. எனினும் அந்த வருடத்தின் பொங்கல் ரேஸில் “போக்கிரி” தான் வேற லெவலில் ஹிட் அடித்தது.
காவலன்:
விஜய் திரைப்படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டுப்போய் கிடந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் வெளிவந்த திரைப்படம்தான் “காவலன்”. 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் வெகு காலம் கழித்து விஜய்க்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது.
விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக திகழ்ந்த திரைப்படம் என்றும் கூட கூறலாம். அதுவரை வழக்கமான ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வந்த விஜய், வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியது இத்திரைப்படத்திற்கு பிறகுதான்.
நண்பன்:
2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த இத்திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்த திரைப்படமாக வெளிவந்தது. வெகு நாட்கள் கழித்து விஜய்யின் யதார்த்த நடிப்பை வெளிகொண்டு வந்த இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.
மாஸ்டர்:
கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துபோனதபோது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்த திரைப்படம் "மாஸ்டர்". விஜய் இத்திரைப்படத்தில் மிகவும் யதார்த்தமான தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விஜய் கேரியரில் முக்கிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்த இந்த திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று வெளிவந்த நிலையில், இதன் வரிசையில் “வாரிசு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை டபுள் கொண்டாட்டமாக ஆக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.