தொடர் தோல்விகள்...விஜய் சேதுபதி நடிகரா? வியாபாரியா?...
பீட்சா படம் மூலம் கவனம் ஈர்த்தாலும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஏனெனில், அதுபோன்ற கதாபாத்திரத்தில் எந்த நடிகரும் நடித்தது கிடையாது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் விஜய் சேதுபதி.
அதுதான் அவரின் பிளஸ். அதனால்தான் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். சூதுகவ்வும், நானும் ரவுடிதான், ஆண்டவன் கட்டளை போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அது வேறு எந்த நடிகர்களிடமும் ரசிகர்கள் பார்க்காதது.
விஜய் சேதுபதி இதுபோலவே நடிக்க வேண்டும்.மற்ற நடிகர்கள் போல் மசாலா படங்களில் நடிக்க கூடாது என்பதே நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்பமாக இருந்தது.
ஆனால், மசாலா படங்களில் நடிக்கும் ஆசை விஜய்சேதுபதிக்கு வந்ததால் எல்லாமே மாறியது. ரெக்க படம்தான் இதன் முதல் துவக்கம். தொடர்ந்து சங்கத்தமிழன் என வழக்கமான ஹீரோக்கள் நடிக்கும் ஹீரோயிசம் உள்ள படங்களில் நடிக்க துவங்கினார். இதனால், விஜய் சேதுபதி காணாமல் போனார்.
தங்களின் மனதில் இடம் பிடித்த விஜய்சேதுபதியை பார்க்க தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். இதை செய்யத்தான் விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் இருக்கிறார்களே! இதை எதற்கு விஜய் சேதுபதி செய்கிறார் என அவர்கள் நொந்துபோனார்கள். ‘உங்கள் மீது மக்களுக்கு உள்ள இமேஜ் வேறு. ஏன் ரெக்க போன்ற படங்களில் நடிக்கிறீர்கள்?’ என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘நானும் கமர்ஷியல் மசாலா படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என பதில் கூறினார் விஜய் சேதுபதி.
கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தால் நடிகர்களின் சம்பளம் உயரும். இதற்குதான் விஜய்சேதுபதியும் ஆசைப்பட்டாரா தெரியவில்லை. 2 கோடி வாங்கிக் கொண்டிருந்தவர் தற்போது 15 கோடி சம்பளம் பெறுகிறார். கதை மற்றும் தனது கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்த விஜய்சேதுபதி தற்போது வியாபாரி ஆகிவிட்டாரா என அச்சம் எழுகிறது.
ஹீரோவா, வில்லனா, குணச்சித்திரமா, சில நிமிடங்கள் மட்டும் வருகிறேனா? எதுவாக இருந்தாலும் சரி. இத்தனைக்கு நாட்கள் கால்ஷீட், இவ்வளவு கோடி சம்பளம் என மாறிவிட்டார்.
ஒரு நடிகருக்கு தான் விரும்பும் படி நடிக்க உரிமை இருக்கிறது. நீங்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் என அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவருக்கு பணத்தேவையும் இருக்கலாம். ஆனால், அவர் ஏற்படுத்திய இமேஜை நம்பி படம் பார்க்க செல்லும் ரசிகர்களை அவர் ஏமாற்றக்கூடாது அல்லவா!.
பணத்தை வாங்கி போட்டுகொண்டு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்து வருகிறார். அதனால்தான் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் ஆகிய 3 படங்களுமே தோல்வியை சந்தித்துள்ளது. லாபம் படத்தால் விஜய் சேதுபதிக்கே ரூ.10 கோடி வரை நஷ்டம் எனக்கூறப்படுகிறது.
அனபெல் சேதுபதி படத்தில் 20 நிமிடம் மட்டுமே வருகிறார். ஆனால், அவர்தான் ஹீரோ என்பது போலத்தான் விளம்பரம் செய்தார்கள். சீதக்காதி படத்திலும் இதுதான் நடந்தது. அதை நம்பித்தான் ரசிகன் அந்த படங்களை பார்த்து ஏமாந்து போனான்.
உண்மையை கூறாமல் மவுனமாக இருந்த விஜய்சேதுபதியும் ஒருவகையில் குற்றவாளிதான். ஏனெனில் ரசிகன் அவருக்காகத்தான் 100 ரூபாய்க்கு டிக்கெட் செலவு செய்து படம் பார்க்க வருகிறான்.
அவர் இந்த ரூட்டிலேயே பயணித்தால் அவர் மீது ரசிகர்களுக்கு உள்ள இமேஜ் உடையும். அவரின் படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து தோல்வியை சந்திக்கும். ஏற்கனவே விஜய் சேதுபதி ஒரேமாதிரி நடிக்கிறார் என்கிற இமேஜ் அவர் மீது இருக்கிறது. இதுவும் சேர்ந்தால் அவர் இறக்கத்தை சந்திப்பார்.
இப்போதாவது விஜய் சேதுபதி இதை புரிந்து கொள்ளவேண்டும்.
பழைய விஜய் சேதுபதியாக அவர் மாற வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும்.
மாறுவாரா விஜய் சேதுபதி?....