தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கியவர்தான் கவுண்டமணி. நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர். 80களில் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். இவரின் வளர்ச்சிக்கு பாக்கியராஜுக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இவர்தான் பாரதிராஜாவை சம்மதிக்க வைத்து பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.
அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். துவக்கத்தில் தனியாக நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் செந்திலை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள். அப்போது ஒரு படத்தின் வெற்றிக்கு எப்படி இளையராஜா தேவைப்பட்டாரோ அதேபோல கவுண்டமணியின் காமெடியும் தேவைப்பட்டது.
ஒரு வருடம் ஓடிய கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி – செந்தில் காமெடி முக்கிய காரணமாக இருந்தது. ஒருகட்டத்தில் ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகாவும் கவுண்டமணி மாறினார். ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணிதான்.
அதேபோல், ஒரு கட்டத்தில் படத்தின் இன்னொரு ஹீரோ போல மாறினார். சத்தியராஜ், கார்த்திக், பிரபு, சரத்குமார் ஆகியோர் நடிக்கும் படங்களில் படம் முழுவதும் உடன் வருவார் கவுண்டமணி. இவரின் காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. எதையாவது பேசி சிரிக்க வைத்துவிடுவார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியர் விஜய் சேதுபதி ‘கவுண்டமணியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் காமெடியை பார்த்துவிட்டு மற்றவர்களின் காமெடி பார்த்தால் எனக்கு சிரிப்பே வராது. குறிப்பாக அவர் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு பாடல் பாடுவார். அதுவே சிரிப்பு வந்துவிடும். அவருடன் நடிக்கும்போது சிரிக்காமல் நடிக்க முடியாது. ஆனால், எப்படி அப்போது நடித்தார்கள் என தெரியவில்லை.
ஏனெனில் இப்போதுபோல் டிஜிட்டல் அப்போது இல்லை. பிலிம்தான். சிரிக்காமல் அவரோடு நடித்த எல்லாருமே சிறந்த நடிகர்கள்தான் நானாக இருந்தால் கண்டிப்பாக சிரித்துவிடுவேன். ஷாட்டே ஓகே ஆகாது. கவுண்டமணி சார் ஒரு ஜீனியஸ்’ என பேசியிருந்தார் விஜய் சேதுபதி.