ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருந்த விஜய்யின் “வாரிசு” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், மேகா ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். எஸ்.தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “வாரிசு” திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது பேமிலி ஆடியன்ஸுக்கான திரைப்படம் என கூறி வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சனங்களே வருகிறது. இந்த நிலையில் “வாரிசு” திரைப்படம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்…
மிகப் பெரிய பிசினஸ் மேக்னட்டான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். எப்போதும் தனது பிசினஸின் மேலயே கண்ணாக இருக்கும் சரத்குமாரின் குணாதிசயம் தனக்கு பிடிக்காமல் போக, பல வருடங்கள் வீட்டை விட்டு தள்ளியே இருக்கிறார் விஜய். மேலும் விஜய்யின் மூத்த அண்ணன்களான ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் தந்தை சொத்துக்கு வாரிசு ஆகவேண்டும் என நினைக்கிறார்கள்.
இவ்வாறு நிலைமை இருக்க ஒரு நாள் விஜய்யின் தந்தையான சரத்குமாருக்கும் தாயார் ஜெயசுதாவுக்கும் 60 ஆம் கல்யாணம் செய்ய முடிவெடுக்கப்படுகிறது. தனது பெற்றோரின் 60 ஆவது கல்யாணத்திற்கு விஜய், தனது தாயாரின் வற்புறுத்தலால் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போதுதான் தனது தந்தையான சரத்குமார், கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயம் விஜய்க்கு மட்டும் தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து தனது தந்தையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் விஜய். ஆதலால் அண்ணன்களான ஸ்ரீகாந்துக்கும் ஷாம்முக்கும் விஜய்யை பிடிக்காமல் போக, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் வில்லன் பிரகாஷ் ராஜ், சரத்குமாரின் பிசினஸை கவிழ்ப்பதற்காக சதி செய்கிறார். இந்த நிலையில் தனது தந்தையின் பிசினஸை விஜய் காப்பாற்றினாரா? தனது பிரிந்துப்போன குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? என்பதே “வாரிசு” படத்தின் கதை.
பழைய திரைப்படங்களில் விஜய் எப்படிப்பட்ட மேனரிசத்தோடு வலம் வருவாரோ அதே போன்ற மேனரிசத்தோடுதான் இதில் விஜய் நடித்திருக்கிறார். ஆனாலும் துருதுருவென இருக்கும் அவரது நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறது. யோகி பாபுவுடன் இணைந்து அவர் செய்யும் நகைச்சுவைகள் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
எனினும் படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனாவிற்கு சுத்தமாக ஸ்கோப்பே இல்லை. வழக்கமான விஜய் படங்களை போலவே இதிலும் கதாநாயகி பாடலுக்கு மட்டுமே நடனமாட வருகிறார்.
இதையும் படிங்க: “இது மெகா சீரியல் இல்லடா, டப்பிங் சிரீயல்”… “வாரிசு” படத்தை கழுவி ஊற்றிய ப்ளு சட்டை மாறன்…
படத்தின் கதை மிகவும் வழக்கமான கதைதான் என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே கணித்து விடுகிறார்கள். எனினும் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டாம் பாகமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
விஜய்க்கு அண்ணன்களாக வரும் ஸ்ரீகாந்த், ஷாம், தாயாராக வரும் ஜெயசுதா, தந்தையாக வரும் சரத்குமார் ஆகியோர் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் இடம்பெற்ற காட்சிகள் எதுவும் மனதிற்கு ஒட்டவில்லை. அதுமட்டுமல்லாது விஜய்யின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எதுவும் ரசிகர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சென்ட்டிமென்ட் காட்சிகள் எதுவும் மனதிற்கு ஒட்டவே இல்லை.
தமனின் இசையில் பாடல் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட இல்லை. ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கமே நடனமாடுகிறது. அதை தாண்டி மற்ற பாடல்களை உருவாக்கிய விதம் அவ்வளவு சிறப்பாக இல்லை.
தெலுங்கு படமாகவும் இல்லாமல், விஜய் படமாகவும் இல்லாமல் ஒரு குழப்பத்தில் ஆழ்ந்தது போல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி. விஜய்யின் மேனரிசத்திற்காக வேண்டுமானால் இத்திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாமே தவிர, மனதிற்கு எந்த காட்சியும் நெருக்கமாக அமையவே இல்லை. மொத்தத்தில் “வாரிசு” படம் விஜய் ரசிகர்களுக்கு சோதனையாக முடிந்திருக்கிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…