நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவர் சினிமாவில் இருக்கும் போது ரசிகர்கள் அவரை தளபதி என கொண்டாடினார்கள். இப்போது நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவரும் அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? அவருக்கு எவ்வளவு பேர் ஓட்டு போடுவார்கள்? வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா இல்லையா என்பது 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியும்.
எனக்காக ஆதரவாக இருந்த மக்களுக்காக நான் நிற்கப் போகிறேன்.. எனக்கு 33 வருடங்கள் ஆதரவு கொடுத்து ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என்றெல்லாம் சமீபத்தில் நடந்த ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் விஜய். விஜய்க்கு ஏதோ அரசியல் ஆசை இப்போது சமீபத்தில் வந்ததாகவே எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. விஜயின் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றியபோதே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அடிக்கடி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அரசியலுக்கு வரவேண்டும் என விஜய் முடிவெடுத்தது நடிகர் தாமு மூலம் தெரிய வந்திருக்கிறது. நடிகர் தாமு விஜயுடன் பத்ரி, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் ஊடகம் ஒன்று அவர் அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.

விஜய் நடித்த முதல் படத்தின் பேரே நாளையே தீர்ப்பு. அதுவே ஒரு குறியீடுதான். விஜய் தனது முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தில் புடவை, அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களை வாங்கி பலருக்கும் கொடுத்தார். அதேபோல் ‘அப்பா நான் சி.எம். ஆகணும்னு ஆசைப்படுகிறார்’ என்று என்னிடம் சொன்னார். பத்ரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நான் ‘ஜெயலலிதா மேடத்தை சந்திக்க போகிறேன்’ என சொன்னேன். ஏனெனில், அப்போது எனக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது.
அதற்கு ‘நீ முன்னாலே போ.. நான் பின்னாலே வருகிறேன்’ என்றார். நான் அவரும் அதிமுகவில் இணைவார் என நினைத்தேன். ஆனால் அரசியலைத்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார் என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது’என தாமு கூறியிருக்கிறார்.