உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்க இருந்தது விஜய் தான்... அவர் நடிச்சிருந்தா நான் மாட்டியிருப்பேன்... ஷாக் நியூஸ் சொன்ன சுந்தர்.சி
விஜய் நடிப்பதாக இருந்த உள்ளத்தை அள்ளித்தா படம் நல்லவேளையாக நடக்காமல் போனதாக சுந்தர்.சி தெரிவித்து இருக்கிறார்.
சுந்தர்.சி தமிழ் சினிமாவின் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர். மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த சுந்தர்.சி இயக்கிய முதல் படம் முறை மாமன். இப்படத்தில் இருந்த காமெடி காட்சிகள் சக்கை போடு போட அவருக்கு முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்தது.
தொடர்ந்து, அவர் இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் சுமாரான வசூலை பெற்றதால் அடுத்த படத்தினை மாஸ் ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் கே.செல்வ பாரதி வசனம் எழுதி இருக்கிறார். அப்படத்தினை என்.பிரபாவதி தயாரித்து இருந்தார்.
முதலில் இந்த படத்தினை விஜயை வைத்து எடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் விஜய் வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டார். உள்ளத்தை அள்ளித்தா தயாரிப்பாளர்களுக்கோ படத்தினை பொங்கலில் வெளியிட வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ பொங்கலை விடுத்து ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ் செய்து கொள்ளுங்களேன் எனக் கேட்டாராம். ஆனால் ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம் இருந்த தயாரிப்பாளருக்கு பொங்கலில் வெளியிட வேண்டும் என்பதே முடிவாக இருந்திருக்கிறது.
இதை தொடர்ந்து விஜயிற்கு பதில் நடிகரை தேடும் போது தான் கார்த்திக்கின் கால்ஷூட் கிடைத்ததாம். ஆனால் இந்த கதையில் விஜய் நடித்திருந்தால் மீண்டும் அவருக்கு ஏற்ற மாதிரி கதையில் மாற்றம் செய்திருக்க வேண்டும். அந்த வேலையில் இருந்து நான் தப்பித்து விட்டேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் சுந்தர்.சி தெரிவித்து இருக்கிறார்.
கார்த்திக், கவுண்டமணி, நக்மா நடிப்பில் உருவான உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்னும் அளவுக்கு வரவேற்பை பெற்ற அந்த படத்தில் கார்த்திக்கை தவிர வேறு நடிகர் நடித்திருந்தால் நன்றாக இருக்காது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.