ஒரு மணி நேரம் காத்திருந்த சூர்யா… சாப்பிடாமல் நடித்துக்கொடுத்த விஜயகாந்த்… என்ன மனிஷன்யா!!
ரசிகர்களாலும் சக நடிகர்களாலும் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உதவி என்று தேடி வருபவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவர் விஜயகாந்த்.
குறிப்பாக பசி என்று யாராவது வந்து நின்றால், அவரை வயிறார சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்த்தின் பெருந்தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1999 ஆம் ஆண்டு விஜயகாந்த், சூர்யா, மீனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பெரியண்ணா”. இதில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆதலால் விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகரை தனது குருவாகவே மனதில் நினைத்து வந்திருக்கிறார். அப்போது சூர்யா, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கொஞ்ச காலமே ஆகியிருந்தது.
ஆதலால் அத்திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் வகையில்தான் விஜயகாந்த் அத்திரைப்படத்தில் நடித்தார். ஆதலால் சூர்யா ஓரளவு அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
இது இவ்வாறு இருக்க, கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான “மாயாவி” திரைப்படத்தில் பல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதில் விஜயகாந்த்தும் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது விஜயகாந்த்தை சந்தித்த சூர்யா, “மாயாவி திரைப்படத்தில் நீங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்” என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு விஜயகாந்த் “நிச்சயமாக நடிக்கிறேன். நாளை என்னுடைய படப்பிடிப்பு ஒன்று நடக்க இருக்கிறது. அங்கே நீங்கள் வாருங்கள்” என சம்மதம் தெரிவித்துவிட்டார்.
அடுத்த நாள் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யா சென்றார். அங்கே விஜயகாந்த் மும்முரமாக ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த சூர்யா, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி காத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சூர்யாவை சந்தித்த விஜயகாந்த், “வெகு நேரமாக காத்திருக்கிறீர்களா தம்பி?” என கேட்டிருக்கிறார். அதற்கு சூர்யா “ஆமாண்ணா, ஒரு மணிநேரமாக காத்துக்கொண்டிருந்தேன். படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்ததால் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என கூறினார்.
அதற்கு விஜயகாந்த், “முன்னமே என்னை அழைத்திருக்கலாமே” என சூர்யாவிடம் கூறினாராம். அதன் பின் படப்பிடிப்பிற்கு உணவு இடைவேளை விட்டிருந்தனர். ஆனால் விஜயகாந்த் காலையில் இருந்து சாப்பிடவில்லையாம். அந்த நிலையிலும் சூர்யாவிற்காக “மாயாவி” திரைப்படத்தின் காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள்!!