ஐயோ வேண்டவே வேண்டாம்!.. ஊமை விழிகள் படத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்!…
மதுரையிலிருந்து சென்னை வந்து தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வாய்ப்பு தேடி அலைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோவாக நடிக்க துவங்கியவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தது. சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி மெல்ல மெல்ல முன்னேறி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.
ஒரு நடிகராக மட்டும் இருந்துவிடாமல் புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரையும் அறிமுகம் செய்து தூக்கிவிட்டவர். இவரின் திரைப்படங்கள் கிராமபுறங்களில் வசூலை குவித்தது. சி செண்டர்களில் விஜயகாந்த் படங்களின் வசூலை ரஜினி படங்களே முறியடிக்க முடியாது. வழக்கமான மசாலா படங்களில் மட்டும் நடிக்கமால் ஊமை விழிகள், செந்தூரப்பூவே போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில், வித்தியாசமான வேடங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் சினிமா நடிகரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ஊமை விழிகள் படத்தில் நான் நடிக்க முடிவானது. அந்த படத்தில் இடம்பெற்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க சில நடிகர்களின் பெயரை என்னிடம் சொன்னார் இயக்குனர். நான் விஜயகாந்த் சரியாக இருப்பார் என சொன்னேன். அவரோ எனக்கு விஜயகாந்த் பழக்கம் இல்லை என்றார். நானே சொல்கிறேன் எனக்கூறி தொலைப்பேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். உடனே சம்மதம் சொன்ன விஜயகாந்த் யார் இயக்குனர்? என கேட்டார்.
ஃபிலிம் இண்ஸ்டியூட் பசங்க என்றேன். அதற்கு விஜயகாந்த் ‘ஐயோ ஃபிலிம்ஸ் இன்ஸ்டிட்யூட் என்றால் வேண்டாம். அவர்கள் ஆர்ட் பிலிம் போல் எடுப்பார்கள்’ என்றார். அதற்கு நான் இல்லை இல்லை. இது நல்ல கதை, கமர்சியலான கதை. உனக்கு இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்று சொன்னேன். அதன்பின்னரே அந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் ஒத்துக்கொண்டார்’ என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.