Cinema News
சொல்லி அடித்த விஜயகாந்த்!.. தோல்வியை சந்தித்த விஜய பிரபாகரன்!.. சோகத்தில் ரசிகர்கள்…
சினிமாவில் மக்களின் அபிமானத்தை பெற்ற நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கருப்பான நடிகர் ஹீரோவாக நடிக்க முடியாது என்கிற செண்டிமெண்டையும், இமேஜையும் முதலில் உடைத்தவர் ரஜினி எனில் அவருக்கு பின் அதை செய்தவர் விஜயகாந்த் மட்டுமே. ரஜினி, கமல் கோலோச்சிய போதே அவர்களுக்கு போட்டியாக பல ஹிட் படங்களை கொடுத்தவர்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் விஜயகாந்துக்கு எப்போதும் இருந்தது. அதை தனது படங்களில் மறைமுகமாக வசனங்களிலும், காட்சிகளிலும் சொல்லி வந்தார். சினிமாவில் கூட எம்.ஜி.ஆர் பட பாணியில்தான் முன்னேறினார். 2005ம் வருடம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது கட்சி பெயரையும் அறிவித்தார்.
கட்சி துவங்கி 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவே விஜயகாந்தின் கட்சி போட்டியிட்டது. அதில், விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும் அவரின் கட்சி மொத்தமாக 8 சதவீத வாக்குகளை பெற்றது. பாமகவின் கோட்டை என சொல்லப்பட்ட விருதாச்சலத்தில் சவால் விட்டு வெற்றியை பெற்றார் விஜயகாந்த்.
அடுத்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சி 10 சதவீத வாக்குகளை பெற்றது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளில் வென்று எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் மாறினார். ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததால் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துகொண்டே போனது. கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் மரணம் மரணமடைந்தார்.
இந்நிலையில்தான், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக பாஜக சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டார். ராதிகாவுக்கு ஆதரவாக அவரின் கணவர் சரத்குமாரும் பிரச்சாரம் செய்தார். நேற்று முடிவுகள் வெளியானது.
துவக்கம் முதலே விஜய பிரபாகரனே முன்னிலையில் இருந்தார். எனவே, அந்த தொகுதியில் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதியத்திற்கு மேல் பின்னடைவை சந்தித்தார் விஜய பிரபாகரன். இறுதியில் 3,80,877 வாக்குகள் பெற்று 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்.
அரசியலில் முதல் தேர்தலே விஜயகாந்துக்கு வெற்றியாக அமைந்தது. ஆனால், அவரின் மகனுக்கு அமையவில்லை. இன்ஸ்டாகிராமில் ‘இது முடிவல்ல. தொடக்கம். மன்னிக்கவும் நண்பர்களே. மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார். விஜய பிரபாகரன் தோல்வியை சந்தித்திருப்பது விஜயகாந்தின் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.