படம் ஃப்ளாப் ஆனதால் காசை திருப்பிக்கொடுத்த விஜயகாந்த்… என்ன மனிஷன்யா!!
தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த்தின் பெருந்தன்மையையும் உதவும் மனப்பான்மையையும் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் தான் நடித்த திரைப்படம் ஃப்ளாப் ஆனதால் வாங்கிய சம்பளத்தை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1987 ஆம் ஆண்டு விஜயகாந்த், ரேகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சொல்வதெல்லாம் உண்மை”. இத்திரைப்படத்தை நேதாஜி என்பவர் இயக்கியிருந்தார். டி.சிவா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் உருவாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்த் ஒப்பந்தமானார். அப்போது விஜயகாந்த்தின் சம்பளம் 3 லட்ச ரூபாய் என பேசப்பட்டது. அதன் பின் விஜயகாந்த்துக்கு கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் பணத்தை புரட்ட தனது சொந்த ஊருக்குச் சென்று 15 நாட்கள் கழித்து சென்னை திரும்பினாராம் டி.சிவா.
ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “கரிமேடு கருவாயன்” என்ற திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. ஆதலால் விஜயகாந்த்தின் நண்பரான இப்ரஹிம் ராவுத்தர், விஜயகாந்த்துக்கு இப்போது சம்பளம் 4 ½ லட்ச ரூபாயாக ஏற்றிவிட்டேன் என டி.சிவாவிடம் கூறிவிட்டாராம்.
அதன் பின் டி.சிவாவை நேரில் சந்தித்த விஜயகாந்த், “ராவுத்தர் சம்பளத்தை கூட்டிட்டானா?” என கேட்டாராம். அதற்கு டி.சிவா “ஆமாம் சார்” என்று கூற “பயப்புடாத, படத்துல ஏதுவும் தப்பு நடந்தா நான் பார்த்துக்குறேன்” என கூறி நம்பிக்கை ஊட்டினாராம்.
அதன் பின் “சொல்வதெல்லாம் உண்மை” திரைப்படம் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்து படுதோல்வியடைந்தது. அத்திரைப்படம் வெளிவந்த பின்பு விஜயகாந்த் டி.சிவாவிடம் “படம் ரிசல்ட் என்ன ஆச்சு?” என கேட்டாராம். அதற்கு டி.சிவா ஒரு குறிப்பிட்ட தொகை நஷ்டமாகிவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டதும் “விடு நான் பாத்துக்குறேன்” என கூறினாராம் விஜயகாந்த்.
அதன் பின் 1988 ஆம் ஆண்டு “பூந்தோட்ட காவல்காரன்” என்ற திரைப்படத்திற்கு டி.சிவாவை ஒரு பங்குத்தாரராக போட்ட விஜயகாந்த், வருகிற லாபத்தில் 20 சதவிகிதம் டி.சிவாவுக்கு பங்காக கொடுக்க முடிவெடுத்தாராம். இத்திரைப்படம் வெளிவந்த பின் “சொல்வதெல்லாம் உண்மை” திரைப்படத்தில் டி.சிவாவுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ அதை விட மூன்று மடங்கு அதிகமான பணத்தை திருப்பிக் கொடுத்தாராம் விஜயகாந்த். என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள்!!