இது நம்ம பில்டிங் இல்லயா?!. 10 வயதில் மகன் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன விஜயகாந்த்...

by சிவா |   ( Updated:2024-08-18 06:45:00  )
vijayakanth
X

Vijayakanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் விஜயகாந்த். சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தவர். அவருடன் கதாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர்தான் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

இருவரும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தனர். ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. எனவே, அவருக்கு மேனேஜர் போல மாறினார் இப்ராஹிம் ராவுத்தார். விஜயகாந்துக்கு வாய்ப்பு வந்தால் கதை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் பார்த்துக்கொள்வது என எல்லாமே அவரே கவனித்தார்.

இப்ராஹிம் ராவுத்தர் என்ன சொல்வாரோ அதை விஜயகாந்த் கேப்டார். விஜயகாந்துக்கு எல்லாமுமாக மாறினார் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் ரசிகர்களிடம் பிரபலமாகி கோலிவுட்டின் ஒரு முக்கிய நடிகராக மாறியதும் இப்ராஹிம் ராவுத்தர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனமும் துவங்கப்பட்டது.

அந்த நிறுவனத்தில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என பல படங்களிலும் நடித்தார். ஆனால், விஜயகாந்துக்கு திருமணம் ஆனதும் அவருக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் கலைப்புலி தாணு மற்றும் பிரேமலதா இருப்பதாக சொல்லப்பட்டது.

சென்னை வடபழனி பகுதியில் இப்ராஹிம் ராவுத்தர் என்கிற பெயரில் ஒரு கட்டிடத்தையும் கட்டினார் ராவுத்தார். அதில்தான், அவரின் தயாரிப்பு அலுவலகம் செயல்பட்டு வந்தது. ராவுத்தருக்கு குழந்தை இல்லை என்பதால் உறவினர் மகனை தத்தெடுத்து வளர்த்தார். அவரின் மகனுக்கும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபகாரனுக்கும் ஒரே வயது.

இருவரும் சிறுவர்களாக இருந்தபோது ‘இது எங்க பில்டிங். உங்க பில்டிங் இல்ல’ என அந்த சிறுவன் விஜயகாந்த் மகனிடம் சொல்லிவிட்டான். இதை அப்பாவிடம் சொன்ன விஜயபிரபாகரன் ‘அப்ப இது நம்ம பில்டிங் இல்லையா?’ என சோகமாக கேட்டிருக்கிறார். இதை வசனகர்த்தாவும், தனக்கு நெருக்கமானவராக இருந்த லியாகத் அலிகானிடம் சொன்ன விஜயகாந்த் ‘யார் பேர்லயாவது பில்டிங் கட்டிட்டு, அப்புறம் அவன் பேர்ல கட்டி இருக்கலாம். சின்ன பையன் மனசுல இது பதிஞ்சி போச்சி பாரு’ என சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

இந்த தகவலை லியாகத் அலிகான் ஊடகத்திற்கு அளித்த பேட்டீய்ல் கூறியிருக்கிறார்.

Next Story