உன் கையை வெட்டப்போறேன்!.. தைரியமா இரு!.. தலைவாசல் விஜய்க்கு ஜெர்க் கொடுத்த கேப்டன்..
சினிமா உலகில் சண்டை காட்சிகளில் கையை வெட்டுவது, காலை வெட்டுவது, கழுத்தை வெட்டுவது, கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. அது போன்ற காட்சிகளை எடுக்கும்போது மிகவும் கவனமாக எடுப்பார்கள்.
அந்த காட்சிகளில் டம்மி கத்தி, டம்மி அரிவாள், டம்மி துப்பாக்கி ஆகியவற்றைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஆனால், சில சமயம் உண்மையான அரிவாள், கத்தி ஆகியவற்றையும் பயன்படுத்துவார்கள். அதுபோன்ற சமயத்தில் நடிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் விபரீதம் ஏற்பட்டு விடும். பல நடிகர்களும் இந்த சூழ்நிலையை சந்தித்திருப்பார்கள்.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பெரிய மருது. 1994ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை என்.கே. விஸ்வநாதன் என்பவர் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். ரஞ்சிதா, தலைவாசல் விஜய், பிரகதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் தலைவாசல் விஜயின் கையை விஜயகாந்த் வெட்டுவது போல் ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சி எடுக்கப்பட்ட போது, டம்மி அரிவாளை எடுத்து வர படக்குழுவினர் மறந்துவிட்டனர். எனவே, தலைவாசல் விஜயிடம் ‘டம்மி அரிவாளை எடுத்துவர மறந்துவிட்டனர். அதனால், உண்மையான அரிவாளைத்தான் பயன்படுத்தப்போகிறேன். என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கா?’ என விஜயகாந்த் கூற அதிர்ந்து போனாராம் தலைவாசல் விஜய்.
இரண்டு நிமிடங்கள் கொடுங்கள் யோசிக்கிறேன் எனக்கூறிவிட்டு தனியே சென்று யோசித்தாராம். நமது கைக்கு எது நடந்தாலும் விஜயகாந்த் நம்மை கை விட மாட்டார் என்கிற முடிவுக்கு வந்த தலைவாசல் விஜய் விஜயகாந்திடம் சென்று ‘நான் நடிக்கிறேன் சார்’ என்றாராம். தலைவாசல் விஜயின் கையில் கை போல வாழைத்தண்டு செட் செய்யப்பட்டு அந்த காட்சியை எடுத்துள்ளனர். விஜயகாந்தும் சரியாக அந்த இடத்தில் வெட்டி டேக்கை ஓகே செய்துள்ளார். இந்த தகவலை தலைவாசல் விஜயே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாவ்.. அழகு செல்லம் சும்மா அள்ளுது!.. குட்டி ஜானுவின் க்யூட் கிளிக்ஸ்…