எனக்காக பல நாட்கள் விஜயகாந்த் காத்திருந்தார்...அவர் மனசு யாருக்கு வரும்?...உருகும் சரத்குமார்....
நடிகர் விஜய்காந்த் என்றால் எல்லோருக்கும் உதவி செய்வார், திரைத்துறையில் பலரையும் தூக்கிவிட்டவர் என அவரை பற்றி பெருமையாக பேச பல விஷயங்கள் உண்டு. திரைத்துறையில் பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்கியவர் மற்றும் வாழவைத்தவர் இவர். லிவ்விங்ஸ்டன், ராம்கி, அருண் பாண்டியன், மன்சூர் அலிகான், பொன்னம்பலம், சரத்குமார் என அந்த பட்டியல் ஏராளம்.
அதனால்தான் விஜயகாந்தை பற்றி எப்போதும் திரையுலகினர் பெருமையாகவும், நல்லவிதமாகவும் பேசுகிறார்கள். பிரபலங்கள் கொடுக்கும் பேட்டிகளில் விஜயகாந்தை எப்போதும் தூக்கிபிடித்தே பேசுகிறார்கள் என்றால் அத்தனை பேர்களுக்கு அவர் உதவி செய்துள்ளார் என்றுதானே பொருள்.
விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், இதை கொண்டாடும் விதாமக சமீபத்தில் ஒரு விழா நடத்தப்பட்டது. அதில், நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் திரைத்துறையில் எல்லாவற்றையும் இழந்து நின்ற போது புலன்விசாரணை படத்தில் வில்லனாக நடிக்க வைத்து என்னை தூக்கிவிட்டது அவர்தான். அதேபோல், அவர் கேப்டன் பிரபாகரன் நடிக்கும் போது அதிலும் ஒரு நல்ல வேடத்தில் நடிக்க வைத்தார்.
அப்போது எனக்கு கழுத்து முறிவு ஏற்பட்டது. இதுவே வேறு யாராக இருந்தாலும் என் கதாபாத்திரத்தை குறைத்துவிட்டு படம் எடுக்க சென்றிருப்பார்கள். ஆனால், எனக்கான படப்பிடிப்பை தள்ளிவைத்தார். நான் குணமாகும் வரை எனக்காக காத்திருந்து என்னை அக்கறையுடன் கவனித்து நடிக்க வைத்தார். நல்ல மனிதர், வள்ளல் என்றால் அது விஜயகாந்த்துதான்’ என சரத்குமார் பேசினார்.