கிளைமேக்ஸை மாற்ற சொன்ன விஜய்.. அவரை தூக்கிவிட்டு வேறு ஹீரோவை போட்ட இயக்குனர்..
சினிமா துவங்கியது முதலே இயக்குனர்கள் கையில்தான் சினிமா இருந்தது. இயக்குனர் என்ன காட்சி எடுக்கிறாரோ அதை எடுப்பார். நடிகருக்கு நடிப்பதுதான் மட்டும்தான் வேலை. இப்படித்தான் பல வருடங்கள் இருந்தது. கதையை கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டால் சிவாஜி கூட எதிலும் தலையிட மாட்டார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அப்படி நடிப்பார். துவக்கத்தில் எம்.ஜி.ஆர் கூட அப்படித்தான் இருந்தார்.
ஆனால், அவருக்கெனவே படங்கள் ஓட துவங்கியதும் எல்லாவற்றிலும் தலையிட துவங்கினார். அவரின் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ட்யூனை கூட அவர்தான் தேர்ந்தெடுத்தார். அவர்தான் தயாரிப்பாளரையும், இயக்குனரையும், கதாநாயகியையும் முடிவு செய்தார். அப்போதுதான் சினிமா நடிகர்களின் கையில் சென்றது. ஆனால், அப்போது அவர் மட்டும்தான் அப்படி இருந்தார். பெரும்பாலான் நடிகர்கள் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடித்தனர்.
ஆனால், காலம் செல்ல செல்ல பெரும்பாலான நடிகர்கர் அப்படி மாறினர். இதில் விஜயும் ஒருவர். விஜய் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. அப்போதுதான் அவர் மீது நம்பிக்கையை வைத்து ‘பூவே உனக்காக’ படத்தில் அவரை வேறு மாதிரி நடிக்க வைத்து ரசிகர்களுக்கு அவரை பிடிக்க வைத்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றிதான் விஜயின் மார்கெட் மதிப்பை அதிகரித்தது. அவருக்கு பெண் ரசிகைகளையும் உருவாக்கியது. தயாரிப்பாளர்களுக்கும் விஜயை வைத்து படம் எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இதற்கெல்லாம் காரணம் விக்ரமன்தான். அதே விக்ரமனுடன் மீண்டும் விஜய் ‘உன்னை நினைத்து’ படத்தில் இணைந்தார். இரண்டு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. எனவே விக்ரமனிடம் சென்று ‘சார். கிளைமேக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்ற முடியுமா?’ என கேட்டாராம்.
அதற்கு விக்ரமன் ‘இதுவரை நான் நினைத்ததை மட்டுமே எடுத்திருக்கிறேன். உங்களுக்காக நான் காட்சியை மாற்றினால் என்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடியாது. ஒவ்வொன்றுக்கும் ‘இது விஜய்க்கு பிடிக்குமா’ என யோசித்து யோசித்து செய்ய வேண்டி வரும். எனவே, நீங்கள் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள். நான் வேறு ஹீரோவை வைத்து எடுத்துக்கொள்கிறேன். நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்’ என டீசண்டாக சொல்லிவிட்டாராம்.
அதன்பின் விஜய்க்கு பதில் சூர்யா அப்படத்தில் நடித்தார். அந்த படம்தான் சூர்யாவை பி மற்றும் சி செண்டர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த தகவலை விக்ரமன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நகைச்சுவை இரட்டையர்களின் நிஜ பயணங்களில் நடந்த காமெடி கலாட்டா….! இப்படி எல்லாமா நடந்தது?