லிஸ்ட்டுலயே இல்லையே.. விஷாலுக்கு எதுக்கு இந்த வேலை.. நல்லாதான போயிட்டு இருக்கு!

vishal
தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக வெளியான படம் 'மதகஜராஜா'. நீண்ட காத்திருப்புக்கு பின் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது. விஷால் மற்றும் சந்தானத்திற்கு பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன.. ஹீரோயின் யார்.. யார் இயக்கப் போகிறார்கள், படப்பிடிப்பு எப்போது என்பது தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவலுக்கு மத்தியில், தற்போதைய தகவலின்படி ரவி அரசு அவரை இயக்கப் போகிறார். 'ஈட்டி', 'ஐங்கரன்' போன்ற படங்களை இயக்கியவர் ரவி அரசு. இவர், இயக்கத்தில் அதர்வா, ஶ்ரீதிவ்யா நடித்த 'ஈட்டி' திரைப்படம் ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது. விறுவிறுப்பான திரைக்கதையால் பேசப்பட்ட படம். இதற்கு பின்பு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்' படத்தை இயக்கினார். திருடும் கொலைகாரனின் பாதையில் ஒரு விஞ்ஞானி குறுக்கே வந்தால் என்ன ஆகும் என்பதை கதை மையமாக கொண்டது.
இதைத் தொடர்ந்து சிவராஜ்குமாரை கன்னடத்தில் இயக்குவார் என செய்திகள் வெளியானது. அவரது நேரடி தமிழ்ப்படம் சத்யஜோதி தயாரிப்பில் உருவாகி, ஜாவா பைக் மையமாக கொண்டதாக பேசப்பட்டது. ஆனால் உடல்நிலை குன்றி வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்துவந்த சிவராஜ்குமார் தற்போது ஓய்வில் இருப்பதால் ரவி அரசு இயக்கும் படத்தில் நடிக்க முடியாது எனத் தெரிகிறது.

இதற்கிடையே, தற்போதைய புதிய தகவலின்படி, விஷாலை இயக்கப் போகிறார் ரவி அரசு. சில மாதங்களுக்கு முன் விஷாலிடம் அவர் சொன்ன ஒன் லைன் விஷாலுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. தற்போது அதனை முழுமையாக உருவாக்கிய அவர், படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளார். இப்படம் ஆக்ஷனுடன் முக்கியமான விஷயத்தை பேசும் என்கிறார்கள். விஷாலின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். துஷாரா, 'ராயன்', 'வீரதீர சூரன்' படங்களில் நடித்து வருவதால், இதிலும் அவருடைய கதாபாத்திரம் எதிர்பார்ப்பில் உள்ளது.
இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னையில் ஆரம்பித்து, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தை முடித்தவுடன் சிவராஜ்குமாரின் படத்திற்கு செல்வார் என தெரிவித்துள்ளனர்.
மார்க் ஆண்டனி, மதகஜராஜா என இரண்டு தொடர்ச்சியான பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களை கொடுத்த விஷால், ரவி அரசு உடன் இணைவதை அவரது ரசிகர்களும் திரையுலகினரும் சர்பிரைஸாகவே பார்க்கின்றனர். ஏனென்றால், ரவி அரசு இயக்கியதில் ஈட்டி மட்டுமே ஓரளவுக்கு பேசப்பட்ட படமாக அமைந்தது. ஐங்கரன் வந்த சுவடே தெரியாமல் சென்றது. இதனால் தற்போது விஷாலுக்கு இருக்கும் மார்கெட்டிற்கு தகுந்தாற்போல் அவரால் படம் இயக்க முடியுமா என்று விஷாலுக்கு நெருங்கியவர் குமுறலாக வெளிப்படுத்தி, நல்லா போயிட்டு இருக்கிற மார்க்கெட்டை சரியான கதை தேர்வு இல்லாமல் விஷாலே சரித்துக் கொள்வார் போல முணுமுணுக்கின்றனர்.