Vishal: ஓடிடிக்கு ஓடி வந்த ரத்னம்... ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

விஷாலின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ரத்னம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழின் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் விஷாலுக்கு சமீபத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு ஹிட்டுமில்லை.
இதனால் பரபரவென திரைக்கதை அமைக்கும் முன்னணி இயக்குநர் ஹரியுடன் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு 3-வது முறையாக இணைந்தார்.
ரத்தம் தெறிக்கும் இப்படத்திற்கு ரத்னம் என பெயரும் வைத்தனர். விஷால், யோகிபாபு, பிரியா பவானி சங்கர் என ஓரளவு நல்லதொரு கூட்டணியும் உருவானது.
இந்த 2௦24-ம் ஆண்டில் இதுவரை நல்லதொரு ஹிட்டுகள் எதுவும் தமிழ் சினிமா அளிக்கவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெளியான ரத்னம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பும் நிலவியது.
கடைசி நேரத்தில் சுந்தர் சியின் அரண்மனை 4 படம் போட்டியில் இருந்து விலகியதால் ரத்னம் சோலோவாக ரிலீஸ் ஆனது.
இதுவரை இல்லாத வகையில் ஹரி இப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இறங்கி புரோமோஷன் செய்தார். என்றாலும் படம் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
இதற்குப்பின் வெளியான அரண்மனை 4 படம் பேமிலி ஆடியன்ஸ்களை கவர ரத்னம் ஒரேயடியாக சுருண்டு விட்டது.
இந்தநிலையில் ரத்னம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற மே 23-ம் தேதி அமேசான் பிரைமில் ரத்னம் வெளியாகிறது.
திரையரங்குகளில் பெரிதாக கவனிக்கப்படாத படங்கள் கூட, ஓடிடி ரிலீசில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விஷாலின் இந்த ரத்னமும் இணையுமா? என்பதை நாம் வழக்கம்போல காத்திருந்து பார்க்கலாம்.