சிவகார்த்திகேயன் பட இயக்குனரை மறைமுகமாக தாக்கிய விஷ்ணு விஷால்... காரணம் இதுதானாம்....!

தமிழில் வெண்ணிலா கபடிக்குழு தொடங்கி தற்போது வெளியாக உள்ள எப்ஐஆர் படம் வரை ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் தான் இளம் நடிகர் விஷ்ணு விஷால். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
வித்தியாசமான கதைகள் மட்டுமல்ல பல அறிமுக இயக்குனர்களுக்கும் விஷ்ணு விஷால் வாய்ப்பளித்துள்ளார். அந்த இயக்குனர்கள் அனைவருமே தற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களாக உள்ளனர். அந்த வகையில் துரோகி - சுதா கொங்காரா, முண்டாசுப்பட்டி - ராம்குமார், இன்று நேற்று நாளை - ரவிக்குமார் என பல இயக்குனர்களை விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த எப்ஐஆர் படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணு விஷால் தான் அறிமுகப்படுத்திய பல இயக்குனர்கள் தற்போது தன்னை கண்டு கொள்வதில்லை என்பது போல் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "என்னுடன் பயணிக்கும் அறிமுக இயக்குனர்கள் ஹிட் கொடுத்த பிறகு அடுத்து பெரிய ஹீரோவை நாடி சென்றுவிடுகின்றனர். அதனால், அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். ஆனால், நான் அப்படியே இருக்கிறேன். அவர்களிடம் நான் கேட்பது ஒன்று தான் ஹிட் ஆனவுடன் மீண்டும் ஒரு படம் என்னுடன் சேர்ந்து செய்துவிடுங்கள். அப்போது தான் நானும் வளர முடியும்" என கூறியுள்ளார்.
முன்னதாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார், அதன் அடுத்த பாகத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இடையில் சிவகார்த்திகேயன் அட வாய்ப்பு வந்ததும், அதை அப்படியே வேறு இயக்குனரிடம் கொடுத்துவிட்டு, சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இயக்க சென்று விட்டாராம். இதை மனதில் வைத்து தான் விஷ்ணு விஷால் இப்படி பேசியதாக கூறப்படுகிறது.