பாரதிராஜாவை புகழ்ந்து பேசிய பத்திரிக்கையாளர்… விசு எடுத்த அதிரடி முடிவால் உருவான புது இயக்குனர்…

Visu
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் சிறப்பான நடிகராகவும் திகழ்ந்த விசு, தனது கலைப்பயணத்தின் தொடக்க காலத்தில் ஒய். ஜி. பார்த்தசாரதியுடன் பல நாடக மேடைகளில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்தார்.
பாலச்சந்தர் இயக்கிய பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக மட்டுமல்லாது கதை , திரைக்கதையிலும் பணிபுரிந்து வந்த விசு, 1982 ஆம் ஆண்டு “கண்மணி பூங்கா” என்ற திரைப்படத்தை இயக்கினார். இதுதான் விசு இயக்கிய முதல் திரைப்படம். இதில் அவர் ஒரு கதாப்பாத்திரத்திலும் நடித்தார்.

Visu
“கண்மணி பூங்கா” திரைப்படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு “மணல் கயிறு”, “அவள் சுமங்கலிதான்” என பல திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். ஆதலால் விசு திரைப்படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
குறிப்பாக விசு இயக்கி நடித்த “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இன்று வரைக்கும் இத்திரைப்படத்தை ரசிப்பவர்கள் பலர் உண்டு.

Samsaram Athu Minsaaram Movie
ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்தது என்னவென்றால் விசுவின் வசனங்கள்தான். மிகவும் தனித்துவமான, நகைச்சுவை கலந்த வசனங்களை துடுக்காக பேசக்கூடிய அவரின் பாணி பலரையும் ஈர்த்தது.
இவ்வாறு தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வந்த விசுவிடம், ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர், “பாரதிராஜாவிடம் பணியாற்றிய உதவியாளர்கள் பலரும் இயக்குனர் ஆகிவிட்டார்கள். ஆனால் உங்களிடம் பணியாற்றிய ஒரு உதவி இயக்குனாரவது இயக்குனர் ஆகியிருக்கிறார்களா?” என கேள்வி கேட்டார்.

Visu
அந்த கேள்வியை கேட்டபோது, என்ன பதில் சொல்வது என்று யோசித்து வந்த விசு, அவருக்கு அருகில் இருந்த அவரின் உதவியாளரான டி.பி.கஜேந்திரனை பார்த்தார். உடனே பத்திரிக்கையாளரிடம் “இதோ, இந்த கஜேந்திரன் அடுத்த மாதம் என்னை வைத்து ஒரு திரைப்படம் இயக்கப்போகிறார். என்னுடைய உதவியாளர்களில் முதன்முதலில் இயக்குனராகப்போவது இவர்தான்” என பதிலளித்தார்.

TPGajendran
உடனே விசு, தன்னுடைய கால்ஷீட் நாட்களை டி.பி.கஜேந்திரனுக்கு கொடுத்துவிட்டார். அப்படி டி.பி.கஜேந்திரன் இயக்கிய முதல் திரைப்படம்தான் “வீடு மனைவி மக்கள்”. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் டி.பி.கஜேந்திரன்.