தோல்வி படத்தின் கதையை மீண்டும் எடுத்து ஹிட் கொடுத்த விசு!. அட அந்த சூப்பர் படமா?!..
ஒரே கதையை சில இயக்குனர்கள் ஒரே நேரத்தில் எடுப்பார்கள். அவை ஒன்றாக கூட வெளியாகும். அது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதோ அந்த படம் ஒடும். அதேபோல், ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தின் கதை பல மொழிகளிலும் ரீமேக் செய்வார்கள். ஹிட் அடித்த பல ஹிந்தி படங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தி மட்டுமில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஹிட் அடித்த பல படங்களின் கதை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்துள்ளது.
அதேபோல், ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த படத்தின் கதையை யாரும் சீண்டமாட்டார்கள். ஆனால், ஏற்கனவே தோல்வியடைந்த ஒரு படத்தின் கதை மீண்டும் படமாக எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது என சொன்னால் நம்புவீர்களா?. உண்மையில் தமிழ் சினிமாவில் அது நடந்தது.
ஏவிஎம் நிறுவனத்திற்கும் இயக்குனர் மற்றும் நடிகர் விசுக்கும் ஒரு நல்ல உறவு இருந்தது. எனவே, விசுவை அழைத்து ‘எங்கள் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் இயக்குங்கள்’ என சொல்ல, விசுவும் சில கதைகளை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கதைகள் ஏவிஎம் நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. இறுதியாக ஒரு கதை சொன்னார். அந்த கதை அவர்களுக்கு பிடித்திருந்தது.
‘இந்த கதை என்னுடையதுதான். ஆனால், ஒய்.ஜி.மகேந்திரன் ஏற்கனவே ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்கிற பெயரில் இதே கதையை படமாக எடுத்தார். ஆனால், படம் தோல்வி அடைந்துவிட்டது’ என விசு சொல்ல, ஏவிஎம் நிறுவனமோ ‘இருக்கட்டும். இந்த கதையை நாம் மீண்டும் எடுத்து ஹிட் கொடுப்போம்’ என சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.
விசு, மனோரமா, ரகுவரன், லட்சுமி, சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் 1986ம் வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை விசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் முதலில் மனோரமா கதாபாத்திரமே கிடையாது. ஏவிஎம் நிறுவனம்தான் விசுவிடம் இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க சொன்னது. விசுவும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படி உருவாக்கினர். அந்த கதாபாத்திரத்தில் மனோரமா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்படத்தின் வெற்றிக்கே முக்கிய காரணமாக இருந்தார். இந்த படத்தில் மனோரமா பேசிய ‘கண்ணம்மா.. கம்முனு கெட’ வசனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
இந்த படம் மூலம் தோல்வியடைந்த படத்தின் கதையை வெற்றி பெற வைக்கமுடியும் என விசு நிரூபித்தார்.