2ம் வகுப்பு படிக்கும்போதே இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகர் விவேக்.. இந்த சம்பவம் தெரியுமா?

by Giri |
Vivek
X

Vivek

இரண்டாம் வகுப்பிலேயே அப்போதைய இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழ் சினிமா நடிகர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல, தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த, தனது இறப்பால் கலங்க வைத்த சின்ன கலைவாணர் விவேக் தான்.

தமிழ் சினிமா பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள். சிலர் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சின்ன கலைவாணர் விவேக். நகைச்சுவை நடிகராக பல்லாயிர கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அவரது நகைச்சுவைகள் மக்கள் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தன. மூடநம்பிக்கை, குழந்தை தொழில், தீண்டாமை போன்ற பல விஷயங்களை தனது நகைச்சுவை மூலம் சிந்திக்க வைத்தார்.

1987ல் "மனதில் உறுதி வேண்டும்" படத்தில் அறிமுகமான விவேக் நான்கு ஆண்டுகளில் நாயகனாக நடித்தார். 1991ல் ராம. நாராயணன் இயக்கிய "செந்தூரதேவி" படத்தில் கனகாவிற்கு ஜோடி ஆனார். தொண்ணூறுகளின் இறுதியில் பிரசாந்த், விஜய், அஜித், மாதவன் ஆகியோர் ஹீரோக்களாக உருவெடுத்த காலகட்டமும், விவேக் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டமும் ஒரே காலமாக இருந்தது. இளம் நாயகர்களுடன் கைகோர்த்த விவேக், தன்னை திரையில் ஸ்டைலிஷாக வெளிக்காட்டினார்.

திரை வாழ்க்கையில் மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் பலருக்கு உதாரணமாக விளங்கினார். சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்க்கை நடத்தினார். பல லட்சம் மரங்களை நட்டு மற்றவர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார். இவரது சிந்தனையும் சிரிக்கவைக்கும் நகைச்சுவையும் அவருக்கு சின்ன கலைவாணர் பட்டத்தை பெற்றுத் தந்தது.

vivek
vivek

இப்படியான விவேக் இரண்டாம் வகுப்பிலேயே அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்திரா காந்தி அந்த கடிதத்திற்கு பதில் எழுதியது தான். சம்பவம் என்னவெனில், நவம்பர் 19ம் தேதி இந்திரா காந்தியின் பிறந்தநாளும், விவேக்கின் பிறந்தநாளும் ஒரே நாளாக இருந்தது. அதையடுத்து விவேக், இந்திரா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து "My Birthday Your Birthday same birthday i wish you. you wish me" என்று கடிதம் எழுதியுள்ளார்.

அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்திருந்த விவேக் ஒரு நாள் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குதிரையில் வந்த ராணுவ வீரர்கள் அவரது பெயரை சொல்லி யார் என்று கேட்டனர். ராணுவ வீரர்கள் தன்னை அழைக்க பயந்த விவேக் அருகிலுள்ள காட்டிற்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்டார். பின்னர் ராணுவ வீரர்கள், பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து அவருக்கு கடிதம் வந்திருப்பதாக கூறி, அதை கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். அதில், பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் இந்திரா காந்தி தன் கையால் எழுதியிருந்தார்.

Next Story