Cinema History
குமரிமுத்துவை கண்ணீர் விடச் செய்த சின்னக் கலைவாணர் விவேக்… அப்படி என்னதான் நடந்தது?..
80களில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. மாறுகண்ணால் பார்த்தும், ஒரு படியாக பயமுறுத்துவது போன்ற சிரிப்பும் தான் இவரது அடையாளங்கள்.
இவருக்கும் ஒரு சோதனையான காலம் வந்தது. அதாவது அவரது கடைசிப் பொண்ணுக்கு கல்யாணம். அப்போது அவருக்கு கையில் போதுமான அளவு பணமில்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு இருக்க, அப்பொது அவருக்கு இலங்கையில் ஒரு கலைநிகழ்ச்சிக்கான அழைப்பு வந்ததாம். அதற்கு அவருக்கு சம்பளமாக 50 ஆயிரமும் பேசப்பட்டதாம். அதற்கு சம்மதித்துள்ளார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடிகர் விவேக்கையும் அழைத்து வர முடியுமான்னு கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க… ராயன் படம் இப்படத்தின் காப்பியா? வில்லனாக களமிறங்கும் லேட்டஸ்ட் சென்ஷேசன்…
சரி என்ற குமரிமுத்து விவேக்கிடம் போனாராம். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாராம் விவேக். அதன்பிறகு குமரிமுத்துவிடம், உங்களுக்கு 50 ஆயிரம் சரி. எனக்கு எவ்வளவு கொடுப்பார்கள் என்று கேட்க, எப்படியாவது விவேக்கை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 லட்சம் ரூபாய் என்று சொல்லிவிட்டாராம். அதன்பிறகு விவேக்கும் சம்மதித்து விட்டார்.
நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்து முடிந்ததாம். 50 ஆயிரம் ரூபாயை குமரிமுத்துவிடம் கொடுத்து விட்டு, விவேக் எங்கே என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டார்களாம். உடனே விவேக் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் குமரிமுத்து. அவருக்குப் பேசியபடியே 2 லட்சம் கொடுத்து விட்டார்கள்.
லேசான புன்னகையுடன் பெற்றுக் கொண்ட விவேக் மெதுவாக குமரிமுத்துவை அழைத்தாராம். அந்த 2 லட்சத்தை அவரது கையில் கொடுத்து விட்டாராம். எதுவும் புரியாமல் குமரிமுத்து முழித்துள்ளார். விவேக் புன்னகை மாறாமல் அப்போது சொன்னது இதுதான். உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்த முடியாமல் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்னீர்களே. இதையும் நீங்களே வச்சிக்கோங்க. கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. இதனால தான் நீங்க கேட்டதுமே நான் நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டு வந்தேன் என்றாராம் விவேக்.
இதையும் படிங்க… ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது இப்படித்தான்!.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!..
வாழ்க்கையில் சந்தோஷம் தாங்க முடியாமல் அழுதது அப்போது தான் என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் குமரிமுத்து. வாழ்ந்து மறைவது பெரிய விஷயமல்ல. நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து பிறருக்கும் பயன் தருமாறு வாழ்வது தான் பெரிய விஷயம். அந்த வகையில் அப்துல் கலாம் வழியில் நின்று லட்சக்கணக்கான மரங்களை நட்ட சின்னக்கலைவாணர் விவேக்கை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.