விகேஆர் பூஜையறையில் அந்த நடிகரின் புகைப்படமா? எம்ஜிஆரை விட இவர்தான் முக்கியமாம்

vkr
சிறுவயதில் இருந்தே நடிப்பில் பல முகங்களை காட்டியவர் விகே ராமசாமி. முதல் படத்திலேயே வயதான கேரக்டர். அப்போது அவருக்கு 19 வயதுதான் இருக்குமாம். 19 வயதில் 60 வயது மதிக்கத்தக்க கேரக்டரில் நடித்தார் விகேஆர். அதிலிருந்து இறுதிவரை அவர் நடித்த படங்களில் எல்லாமே வயதான கேரக்டரில் தான் நடித்தார். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில்தான் வந்திருப்பார். ஆனால் சினிமா யாரை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு உதாரணம்தான் விகேஆர்.
ஆரம்பத்தில் நாடக சபாவில் இணைந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவில் இருபெரும் துருவங்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் படங்களில் பெரும்பாலும் விகேஆரை பார்க்கலாம். இருவருடனும் நெருக்கமான தொடர்பை கொண்டவர். கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்த விகேஆர் நடித்த அத்தனை கேரக்டருமே வயதான தோற்றம்தான்.
இவர் கடைசியாக சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் நடித்தார். அதன் பிறகு உடல் நிலை சரியில்லாமல் காலமானார். இந்த நிலையில் விகேஆர் வீட்டின் பூஜையறையில் ஒரு நடிகரின் படம் இருக்குமாம். அவரை தினமும் வழிபடுவது விகேஆரின் வழக்கமாம். அது வேறு யாருமில்லை ரஜினியின் புகைப்படம்தான். ஒரு பத்திரிக்கையாளர் விகேஆரை பேட்டி காணும் போது தன்னுடைய பூஜையறையை காண்பித்தாராம்.
அப்போது எல்லா சக்தி வாய்ந்த தெய்வங்களும் இருக்க நடுவே ரஜினியின் புகைப்படத்தையும் வைத்து வழிபட்டாராம். எம்ஜிஆர், சிவாஜி தனக்கு பல வழிகளில் உதவி செய்தாலும் ரஜினி செய்த உதவியை தன்னால் மறக்க முடியாது என விகேஆர் கூறினாராம். ஏனெனில் ரஜினியை வைத்து படத்தை தயாரிக்க நினைத்தாராம் விகேஆர். ஆனால் அந்த நேரத்தில் ரஜினி மிகவும் பிஸியாக இருக்க பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
ஒரு நாள் அருணாச்சலம் படம் தயாராக போவதாகவும் அதன் மூலம் 8 தயாரிப்பாளர்கள் பலனடைய போவதாகவும் அந்த 8 தயாரிப்பாளர்கள் லிஸ்ட்டில் விகேஆரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் விகேஆருக்கு செய்தி வந்தது. உடனே விகேஆருக்கு அதிர்ச்சி. நாம் அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க நினைத்தோம். அதை மனதில் வைத்து இந்தப் படத்தில் தன்னை தயாரிப்பாளராக மாற்றிவிட்டாரே ரஜினி என நினைத்தாராம் விகேஆர்.

அதுமட்டுமில்லாமல் அருணாச்சலம் படத்தில் விகேஆருக்கு ஒரு கேரக்டரும் கொடுத்து அதற்கான சம்பளத்தையும் ரஜினி கொடுத்தாராம். படம் முடிந்து ஒரு சூட்கேஸில் 25 லட்சத்தை எடுத்துக் கொண்டு விகேஆர் வீட்டிற்கு வந்தாராம் ரஜினி. அதை விகேஆரிடம் கொடுத்துவிட்டு சென்றாராம். அருணாச்சலம் படத்திற்காக ஒரு பைசா கூட நான் என் கையில் இருந்து போடவில்லை. ஆனால் என்னை ஒரு தயாரிப்பாளராக வெற்றியடைய வைத்தார் ரஜினி என அந்த சம்பவத்தை கூறினாராம் விகேஆர். அதனால்தான் பூஜையறையில் ரஜினியின் புகைப்படத்தை வைத்து வணங்கி வந்தாராம் விகேஆர்.