Connect with us
sadhguru

latest news

ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ பெயருடன் கூடிய தெரு இருக்க வேண்டும் – பண்டிட் மாநாட்டில் சத்குரு!..

காஷ்மீரின் பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும், அவலங்களையும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக, இந்தியா முழுவதும் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ, வட்டமோ அல்லது காஸ்யப்ப மலையோ, சிகரமோ இடம்பெற செய்வதற்கு நீங்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்” என காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு பேசினார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு (Global Kashmiri Pandit Diaspora) என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

sadhguru

sadhguru

அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தப்பட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது” என கூறினார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், “உங்கள் ஒவ்வொருவருடைய ஆழமான வலிகளுக்கும் என் இதயம் அனுதாபம் கொள்கிறது. காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும்.

நம்மால் நடந்து முடிந்தவற்றை சரி செய்ய முடியாது. ஆனால், கொண்டாட்டம் மிகுந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் உறுதி எடுக்க முடியும். காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் கருத்துருவாக்கத்தை மாற்றும் பணியில் இளைஞர்கள் சக்தி வாய்ந்த மற்றும் பொறுப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும். என் வாழ்த்துக்களும், ஆசியும் உங்களுடன் இருக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

இது தவிர, காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அம்சங்களை பாதுகாக்க ஆதரவு அளிக்க தான் தயாராக இருப்பதாகவும் சத்குரு உறுதி அளித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் ‘காஷ்மீர் தினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும்” என்றார்.

google news
Continue Reading

More in latest news

To Top