ஒரு மாவீரனின் வரலாற்று கதை....பொறந்தது பனையூரு மண்ணு மருதநாயகம் என்பது பேர்களில் ஒண்ணு...!
1997ல் உலகநாயகன் கமல்ஹாசன் தூசி தட்டி சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முயற்சித்தார். அதற்காக அவர் டிரைலரையும் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்தார். தனது லட்சியப்படமாக எடுத்த அவர் தொடர்ந்த பணச்சிக்கலால் படத்தை இடையிலேயே கைவிட்டார்.
இருப்பினும் இந்தப்படத்திற்காக யாராவது கடன் கொடுத்தால் தொடர்ந்து எடுக்கலாம் என்றும் கூறிவந்தார். ஆனால் தற்போது இந்தப்படத்தில் தன்னால் நடிக்க இயலாத சூழல் உள்ளது. அதற்கு எனது உடல் ஒத்துழைக்காது என்றும் தெரிவித்து விட்டார். இடையில் இந்தப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையும் எடுத்து விட்டார்கள்.
இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை இந்தப்படம் ஒரு பேசும்பொருளாக மாறிவிட்டது. அப்படி என்ன தான் இந்த மாவீரனின் கதையில் இருக்கிறது என்று பார்த்தால் அதிசயித்துப் போவீர்கள். அவ்வளவு சுவாரசியங்கள் கொட்டிக்கிடக்கிறது. பார்க்கலாமா...!
18ம் நூற்றாண்டின் நடுவில் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தார். பின்னாளில் தென் தமிழகம் முழுவதும் ஆட்சி செய்தார். இவரது இயற்பெயர் முகமது யூசுப்கான். ஆங்கிலேயப் படைத்தளபதியாக இருந்து கடைசியில் அவர்களையே எதிர்த்தவர். நண்பர்களின் துரோகத்தினால் இவரது வாழ்க்கை துயரமாக முடிந்தது.
18ம் நூற்றாண்டின் நடுவில் நாயக்கர்களின் ஆட்சி சரிந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆற்காடு நவாப்புகளின் ராஜ்யமே மேலோங்கியிருந்தது. நவாப்போடு பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கைகோர்த்துக் கொண்டிருந்தது. இவர்களைத்தவிர தஞ்சாவூர் மராத்தியர்களும், மறவர்களும் ஆண்டு வந்தனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளை பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். 1725ல் பனையூர் என்ற கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் மருதநாயகம் பிள்ளை. குறும்புமிக்க சிறுவனாக இருந்த இவர் இளமையிலேயே வீட்டை விட்டு ஓடி இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அப்போது இவரது பெயர் முகமது யூசுப் கான் ஆனது.
பின்னர் பாண்டிச்சேரி சென்று சில காலம் பணிபுரிந்தார். அப்போது மர்சான் என்ற பிரெஞ்சுக்கார இளைஞனின் நட்பு கிடைத்தது. இந்த நட்பே அவரது முடிவுக்கும் காரணமானது.
அங்கிருந்து சென்ற யூசுப்கான் தஞ்சாவூர் மராத்தியர்களிடம் படைவீரனாக சேர்ந்தார். இன்றைய ஆந்திரப்பிரதேசம் நெல்லூரை அடைந்து ஆற்காட்டு நவாப்பின் படையில் சேர்ந்தார். மார்சியா என்ற போர்த்துக்கீசிய கிறிஸ்தவப் பெண்ணை மணந்தார்.
தமிழ் மட்டுமின்றி பிரெஞ்ச், ஆங்கிலம், போர்த்துக்கீசியம் மற்றும் உருது மொழியில் புலமை பெற்றவர் முகமது யூசுப்கான்.
நவாபின் படையில் ஆரம்ப காலத்தில் தண்டல்காரனாக இருந்த அவர் பின்னர் சிப்பாய், ஹவில்தார் என ஆகி படைத்தளபதியாக முன்னேறினார். 1751ல் ஆற்காட்டு அரியணையில் ஏற நவாபுகள் சந்தாசாகிபுக்கும், வாலாஜாவுக்கும் கடும் சண்டை நடந்தது.
சந்தா சாகிப்புக்கு துணையாக பிரெஞ்சுக்காரர்களும், வாலாஜாவுக்குத் துணையாக ஆங்கிலேயர்களும் போரில் இறங்கினர். ராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயப் படையினர் சந்தாசாகிப்பைத் தோற்கடித்தனர். வாலாஜா ஆற்காடு நவாப் ஆனார்.
தோல்வியுற்ற சந்தாசாகிப்பின் தலைசிறந்த வீரர்கள் ஆங்கிலேயப் படையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் படைத்தளபதியான யூசுப் கானும் ஒருவர். ஆங்கிலேயப்படையில் ராபர்ட் கிளைவுடன் நெருங்கிப் பணிபுரிந்த யூசுப்கான் போர் யுக்திகளில் கைதேர்ந்தவர் ஆக மாறினார்.
யூசுப்கானின் வீரத்தை அங்கீகரிக்கும் விதத்தில் 1755ல் ஆங்கிலேயர்கள் அகில சிப்பாய் படைகளின் தளபதி என்ற பட்டத்தையும், தங்கப்பதக்கத்தையும் கொடுத்தனர்.
ஆங்கிலேயர் படையில் மிக உயர்ந்த பதவி கொண்ட ஒரு இந்தியர் இவர் தான். இதற்குப் பிறகு அவர் அனைவராலும் கான்சாகிப் என்று மரியாதையுடன் போற்றப்பட்டார். தன்னை ஆற்காடு நவாபாக அரியணை ஏற்றி உதவிய ஆங்கிலேயருக்கு வாலாஜா நிறைய கடன் பட்டிருந்தார்.
அவற்றை திரும்ப அடைக்கும் பொருட்டு மதுரை பகுதியில் வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார். அந்தப் பொறுப்பை ஏற்ற கான்சாகிப் வெற்றிகரமாக வரிகளை வசூலித்துக் கொடுத்தார்.
பின்னர் மதராஸில் ஆங்கிலேயரின் ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் தாக்கிய போது ஆங்கிலேயரின் வெற்றியில் யூசுப்கான் பெரும்பங்கு வகித்தார். பின்னர் ஆங்கிலேயர்கள் தென்தமிழகம் முழுவதையும் அடக்கிய மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு யூசுப்கானை ஆளுநராக நியமித்தனர்.
அவரின் ஆட்சியில் மதுரைக்கோட்டையைப் பழுது பார்த்தார். மீனாட்சி அம்மன் கோவிலை புதுப்பித்தார். விவசாயம் செழித்திடவும் உதவினார்.
நவாபையும் ஆங்கிலேயர்களையும் எதிர்த்த பாளையக்காரர்களைப் பல போர்களில் வீழ்;த்தினார் யூசுப்கான். அழகுமுத்துக்கோனைக் கொன்றது மட்டுமல்லாமல் 3 வருட முயற்சியில் பூலித்தேவரையும் வீழ்த்தினார்.
அது மட்டுமல்லாமல் அனைத்துப் பாளையக்காரர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். யூசுப்கானின் திறமையால் நவாப்புக்கும், ஆங்கிலேயர்களுக்கும் வருமானம் வந்து கொட்டியது.
இதனால் யூசுப்கானின் பெருமையும், வலிமையும் அதிகரித்தது. ஆனால் இந்த வளர்ச்சி நவாபுக்கு பொறாமையையும் பயத்தையும் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் கீழ் இருந்தவர்கள் ஆற்காடு நவாப்கள். ஹைதராபாத் நிஜாமே யூசுப் கான் தான் சட்டப்பூர்வமான ஆட்சியாளர் என்று அறிவித்தார்.
யூசுப்கானின் அபார சக்தி கண்டு பொறாமை கொண்ட நவாப் இவன் ஒருநாள் தன்னை விட சக்திவாய்ந்தவனாக ஆகிவிடுவான்..என்று பயந்தார்.
இதற்கிடையே யூசுப்கான் தங்களுக்கு எதிராகப் படைகளைத் திரட்டுவதாக ஆங்கிலேயருக்கு வதந்திகள் வந்தன. பின்னர் நவாபும், ஆங்கிலேயரும் யூசுப்கானை கைது செய்ய முடிவு எடுத்தனர்.
இதை அறிந்த யூசுப்கான் நவாபையும், ஆங்கிலேயரையும் எதிர்க்க நாடு முழுவதும் இருந்து பெரும் படைகளைத் திரட்டினார். பிரெஞ்சுக்காரர்களையும் தன் படையில் சேர்த்துக் கொண்டார். தென் தமிழகம் முழுவதற்கும் தானே மன்னன் என்று அறிவித்தார்.
இதை அறிந்த ஆங்கிலேயர் படைகளைத் திரட்டிக்கொண்டு யூசுப்கானின் மதுரைக்கோட்டையைத் தாக்கினர். கோட்டையைத் தகர்க்க முடியாமல் படை பின்வாங்கியது. ஓர் ஆண்டிற்குப் பிறகு இன்னும் பெரிய படையைத் திரட்டிக்கொண்டு கோட்டையை முற்றுகையிட்டனர்.
இம்முறை உணவும், குடிநீரும் கோட்டைக்குள் கொண்டு செல்ல முடியாதபடி நிறுத்தப்பட்டன. மதுரையில் பல மக்கள் பட்டினியில் வாடினாலும் தைரியமாக எதிர்த்து நின்றனர். பல மாதங்கள் கடந்தும் ஆங்கிலேயரால் வெற்றி பெற முடியவில்லை.
இறுதியில் யூசுப்கானைத் தங்கள் பலத்தால் தோற்கடிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தனர் ஆங்கிலேயர்கள். தொடர்ந்து ஒரு வஞ்சகத்தை செய்தனர்.
யூசுப்கானுடன் கோட்டைக்குள் நெருக்கமாக இருந்த இருவருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் ஈர்த்தனர். அந்த இரு சதிகாரர்கள் பாண்டிச்சேரியில் இருந்து வந்த அவரது பழைய நண்பர் பிரெஞ்சு படைத்தளபதி மர்சாந்த் மற்றும் அவரது திவான் சீனிவாச ராவ்.
1764ல் ஒருநாள் தனது அரண்மனையில் யூசுப்கான் தொழுது கொண்டிருந்த போது சதிகாரர்கள் அவரைக் கட்டி வைத்து ஆங்கிலேயர்களிடம் ரகசியமாக ஒப்படைத்தனர்.
மறுநாள் மதுரை அருகே ஆங்கிலேயர்கள் முகாமிட்டு இருந்த சம்மட்டிபுரத்தில் தனது மனைவியையும், 2 வயது மகனையும் நாட்டு மக்களையும் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் யூசுப்கான் தூக்கிலிடப்பட்டார்.
தான் யாருக்கும் அடிமை இல்லை என்று சின்ன சிப்பாயாக இருந்ததில் இருந்து மன்னராக இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து வீர மரணம் அடைந்த மருதநாயகம் உண்மையிலேயே சுதந்திரப் போராட்ட வீரர் தான்.