இந்தப்படத்தை இப்படியும் போடலாம்னு போட்ட தியேட்டர்காரர்...படத்தின் வெற்றி கண்டு அசந்து போனார் தயாரிப்பாளர்...!

by sankaran v |   ( Updated:2023-02-20 03:06:38  )
இந்தப்படத்தை இப்படியும் போடலாம்னு போட்ட தியேட்டர்காரர்...படத்தின் வெற்றி கண்டு அசந்து போனார் தயாரிப்பாளர்...!
X

MTK

மோகன், ராதா, அமலாவின் நடிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் உருவான படம் மெல்லத்திறந்தது கதவு. அப்போதைய ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. 1986ல் வெளியான இந்தப்படம் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது. அது என்ன என்று ஏவிஎம் பட அதிபர் எம்.சரவணன் சொல்வதைப் பார்க்கலாம்.

எம்எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் என ஒருமுறை பாரதிராஜாவும், இளையராஜாவும் என்னிடம் வந்து யோசனை சொன்னார்கள்.

நாங்கள் அப்போது நிறைய படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தோம். அவர்கள் சொன்ன உடனே அதை ஏற்றுக்கொண்டேன்.

ஒருமுறை அப்பா என்னை அழைத்து விஸ்வநாதனை மட்டும் என்றும் விட்டுவிடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே என்று சொன்னார்.

MTK2

பாரதிராஜாவும், இளையராஜாவும் எம்.எஸ்.வி.க்காக எடுக்கப்பட்ட படம் தான் மெல்லத் திறந்தது கதவு.

அப்போது இளையராஜா, நானும் எம்எஸ்.வி.யும் சேர்ந்து இந்தப்படத்திற்கு இசை அமைக்கிறோம் என்றார். அதுவும் எனக்கு பிடித்திருந்தது. பாடல்களுக்கான டியூனை எம்எஸ்வி போட்டார். ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.

பாடல்கள் மிக மிக இனிமையாக வந்தன. படம் முதலில் சுமாராகத் தான் ஓடியது. அப்புறம் லேட் பிக் அப் ஆனது.

மதுரை சினிப்ரியா தியேட்டரில் ஒரு அதிசயம் நடந்தது. அதாவது அங்குள்ள எங்களது விநியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே இடைவேளைக்குப் பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தையப் பகுதியைப் பின்னாலும் போட்டால் நல்லாருக்கும் என்று நினைத்து அப்படியே மாற்றிப் போட்டார்.

இந்த விஷயம் படம் பார்த்த ரசிகர்கள் யாருக்குமே தெரியவில்லை. இப்படிப் போட்ட படம் ஒரிஜினல் படத்தை விட சூப்பராக இருந்தது. ரசிகர்களும் அதிகமாக ரசித்தனர்.

Ratha in MTK

எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தகவல் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. மற்றத் தியேட்டர்காரர்களும் அப்படியே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம். அதற்காக திரும்பவும் தியேட்டர்காரங்க போட்ட மாதிரியே படத்தை மாற்றி அமைத்து திரும்ப வெளியிட ரீ சென்சார்ஷிப்புக்குப் போனோம்.

அதுதான் படம் ரிலீஸ் ஆயிடுச்சே...இப்போது இது உங்களுக்குத் தேவையா எனக் கேட்டார். நாங்கள் தான் விடாமல் வற்புறுத்தினோம். அப்போது ஒரு குறும்பு அதிகாரி இது மட்டும்தான் மாற்றுகிறீர்களா இல்லை படத்தின் தலைப்பையும் கதவு திறந்தது மெல்ல என்று மாற்றப் போகிறீர்களா எனக் கேட்டார்.

MTK3

இந்தப்படத்தைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும்னா இதுவரை இந்தப்படத்தை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. படம் சூட்டிங் முடிந்தது. பார்க்கலாமா என்று கேட்டேன். டைரக்டர் சுந்தரராஜன் இப்போ வேணாம். டப்பிங் முடிஞ்சதும் பாருங்க என்றார். டப்பிங் முடிந்தது. அப்போது கேட்டேன்.

இப்ப வேண்டாம். ரீ ரிக்கார்டிங் முடிஞ்சதும் பாருங்க என்றார். அப்ப தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்றார். இப்படியே படத்தைப் பார்ப்பது தள்ளிக்கொண்டே போனது. சில பாடல்களை மட்டும் பார்த்தேன். படம் முழுவதுமாகப் பார்க்கவில்லை. என்றாலும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

Next Story