தமிழ்சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடிகர்களுக்குத் திருப்புமுனை தந்த படங்கள் - ஒரு பார்வை
தமிழ்த்திரை உலக வரலாற்றில் ரசிகர்கள் மிகவும் ரசனை மிக்கவர்கள். கதையை வெகுவாக நேசிப்பவர்கள். அழுத்தமான கதை இருந்தால் யார் நடித்தாலும் ரசிப்பார்கள். உணர்வுப்பூர்வமான நடிப்பை யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள் ரசிக்கும் வகையில் இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்வார்கள். பல புதுமுக நடிகர்களை திறமை இருந்தால் வாரி அணைத்துக் கொள்வார்கள். அவர்களின் பேராதரவில் மிளிர்ந்த தமிழ்த்திரை உலக நட்சத்திரங்களை அன்று முதல் இன்று வரை 3 தலைமுறைகளாகப் பார்க்கலாம்.
நடிகர் என்றால் அவர்கள் முன்னேறுவதற்கு முதல் படிக்கட்டாக அமைவது திருப்புமுனை தரும் படங்கள் தான். அந்த வகையில் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்னென்ன என்றும் பார்க்கலாம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மலைக்கள்ளன், நடிகர் திலகம் சிவாஜிக்கு பராசக்தி, நம்பியாருக்கு திகம்பர சாமியார், காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு கணவனே கண்கண்ட தெய்வம், எஸ்எஸ்.ராஜேந்திரனுக்கு முதலாளி, சிவக்குமாருக்கு கந்தன் கருணை ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.
அதே போல ரவிச்சந்திரனுக்கு காதலிக்க நேரமில்லை, நாகேஷ்க்கு நீர்க்குமிழி, ஜெய்சங்கருக்கு இரவும் பகலும் படங்கள் திருப்புமுனை தான்.
அதற்கடுத்த தலைமுறையாக வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு முள்ளும் மலரும், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 16 வயதினிலே, புரட்சிக்கலைஞர் விஜயகாந்துக்கு சட்டம் ஒரு இருட்டறை, புரட்சித் தமிழன் சத்யராஜிக்கு கடலோரக் கவிதைகள், இளைய திலகம் பிரபுவுக்கு கோழி கூவுது, மோகனுக்கு பயணங்கள் முடிவதில்லை ஆகிய படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.
அதன்பிறகு பார்க்கப்போனால் டி.ராஜேந்தருக்கு தங்கைக்கோர் கீதம், நவரச நாயகன் கார்த்திக்கிற்கு அலைகள் ஓய்வதில்லை, பாக்யராஜிக்கு புதிய வார்ப்புகள், சுதாகருக்கு கிழக்கே போகும் ரயில், பாண்டியனுக்கு மண்வாசனை, பாண்டியராஜனுக்கு ஆண்பாவம் ஆகிய படங்கள் திருப்புமுனை.
ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு சங்கர் குரு, கவுண்டமணி, செந்தில் என்ற நகைச்சுவை இரட்டையர்களுக்கு வைதேகி காத்திருந்தாள், ரகுவரனுக்கு சம்சாரம் அது மின்சாரம் படங்கள் செம மாஸ் ஹிட்டாகி திருப்புமுனையைத் தந்தன.
அடுத்த தலைமுறையின் தொடக்கமாக சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு புதுப்புது அர்த்தங்களும், ராஜ்கிரணுக்கு என் ராசாவின் மனசிலே படமும், டாப் ஸ்டார் பிரசாந்துக்கு வைகாசி பொறந்தாச்சு, சரத்குமாருக்கு சேரன் பாண்டியன் என படங்கள் ஹிட்டாகி திருப்புமுனை ஆயின.
ராம்கிக்கு சின்னப்பூவே மெல்லப்பேசு, பார்த்திபனுக்கு புதிய பாதை, ரமேஷ் அரவிந்துக்கு வசந்த காலப் பறவைகள், அருண்பாண்டியனுக்கு ஊமை விழிகள், பிரகாஷ் ராஜ்க்கு இருவர் ஆகிய படங்கள் திருப்புமுனை தான்.
அடுத்த 3ம் தலைமுறையாக தளபதி விஜய்க்கு பூவே உனக்காக, அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு ஆசை, விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு பிதாமகன், கார்த்திக்கு பருத்தி வீரன், சிலம்பரசனுக்கு மன்மதன், மாதவனுக்கு அலைபாயுதே ஆகிய படங்களும் மெகா ஹிட்டாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின.