தளபதி படத்துல யாராவது இந்த விஷயத்தை எல்லாம் கவனிச்சீங்களா? பிரமிக்க வச்சிருக்காங்களே...!

by sankaran v |
thalapathi
X

thalapathi

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி என்ற இருபெரும் சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடித்த படம் தளபதி. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கும். மணிரத்னம், இளையராஜாவின் இசையில் கடைசி படமாக வந்தது தளபதி தான். ஜானகி, யேசுதாஸ் பாடிய புத்தம் புது பூ பூத்ததோ பாடல் இந்தப் படத்தில் இடம்பெறவில்லை. படத்தில் மம்முட்டி துரியோதனனாகவும், ரஜினி கர்ணனாகவும், ஸ்ரீவித்யா குந்தியாகவும் மகாபாரதத்தை மூலக்கதையாகக் கொண்டு உருவகப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.

இளையராஜா தான் தமிழ்சினிமாவுக்கே முதன் முதலாக 'தீம் மியூசிக்'கைக் கொண்டு வந்து இருக்கிறார். படத்தில் 'சின்னத்தாயவள்' பாடலுக்கான மியூசிக் அதன் ஆரம்ப இசையும், ரயிலின் ஓசையும் நம்மை அவ்வப்போது படம் முழுவதும் வருடி விட்டுச் செல்லும். இந்தப் பாடலை ஜானகி அருமையாகப் பாடி இருப்பார். இந்தப் பாடலில் ஒரு அழகான வரி வரும். 'தாயழுதாலே நீ வரும். நீ அழுதாயே தாய் வர...' என்ன ஒரு அழகான வரி என்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

அதே போல 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலுக்கு இளையராஜா மும்பையில் தான் இசை அமைத்தாராம். அது ஆர்.டி.பர்மனின் ஒலிப்பதிவு கூடம். அங்கிருந்த இசைக்கலைஞர்கள் எல்லாருமே வியந்து பாராட்டினார்களாம். போர்க்களக்காட்சியை அப்படியே இசையால் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

thalapathi song

thalapathi song

அதே போல மணிரத்னமும் அந்தப் பாடலுக்கு குறைந்த அளவு குதிரைகளையும், ஆட்களையும் வைத்துக்கொண்டு அற்புதமாக படமாக்கி இருப்பார். அதே போல 'காட்டுக்குயிலு' பாடலக்கு எஸ்பிபியும், ஜேசுதாசும் இணைந்து அட்டகாசமாகப் பாடியிருப்பார்கள். 'ராக்கம்மா கையத்தட்டு' என்ற குத்துப் பாடலில் குனித்த புருவமும் என்ற தேவாரப்பாடலை ரம்மியமாக நுழைத்திருப்பார் இசைஞானி. படத்தில் அத்தனைப் பாடல்களையும் எழுதி அசத்தியவர் கவிஞர் வாலி.

படத்தில் இசை மட்டுமல்ல. சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவும் நம்மைக் கவர்ந்திழுக்கும். படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ஓவியம் போல இருக்கும். படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் மகாபாரதத்தில் வரும் கர்ணனுக்குச் சமமான பாத்திரம். அதன்படி கர்ணன் என்பவன் சூரியனின் குழந்தை என்று சொல்வார்கள். அதற்காக படத்தில் சூரியன் வரும் ஒவ்வொரு காட்சியையும் அதி அற்புதமாகப் படம்பிடித்து இருப்பார்.

'யமுனை ஆற்றிலே' பாடலைப் பார்த்தால் தெரியும். அது மட்டுமல்லாமல் படத்தில் பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களை டைட் குளோசப்பில் எடுத்திருப்பார். அப்போது தான் அவர்களது முகபாவ உணர்ச்சிகளை நாம் ரசிக்க முடியும் என்பது அவர் எண்ணம். இதிகாசத்தில் கர்ணன் இறந்தாலும் படத்தில் ரஜினியைக் காப்பாற்றி இருப்பார் மணிரத்னம். அதற்கேற்ப காட்சிகளை அற்புதமாக வடிவமைத்திருப்பார்.

தேவராஜாக வரும் மம்முட்டியும், சூர்யாவாக வரும் ரஜினியும் எப்பேர்ப்பட்ட நட்பு கொண்டவர்கள் என்பதை காட்டுக்குயிலு பாடலின் ஒரு வரியில் அழகாக சொல்லி இருப்பார் வைரமுத்து. என் நண்பன் போட்ட சோறு. நிதமும் தின்னேன் பாரு. நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன்னு. இது போதாதா..? படத்தைத் தூக்கி நிறுத்த. படம் முழுக்க ரஜினி, மம்முட்டி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் நடிப்பும் நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

Next Story