Connect with us

அடேங்கப்பப்பா….!!! இந்த அற்புதமான பாடல்களை எல்லாம் கமலா பாடினார்…!!!

Cinema History

அடேங்கப்பப்பா….!!! இந்த அற்புதமான பாடல்களை எல்லாம் கமலா பாடினார்…!!!

உலகநாயகன் கமல் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த பாடகர் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தப்பதிவின் மூலம் உங்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகும். இனி அந்த உன்னத கலைஞனின் இசை ஆர்வத்தைப் பற்றிப் பார்ப்போம்.

கமல்ஹாசன் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். அவரது அம்மா ராஜலட்சுமி பிரமாதமாக வயலின் வாசிப்பார். அண்ணன்கள் சாருஹாசன், சந்திரஹாசன் பாடகர்கள் தான். கமல் சினிமாவில் நடிக்க வரும் முன்பே மதுரையில் வெங்கடேசன் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார்.

1984ல் கரிஷ்மா என்ற இந்திப்பட சூட்டிங்கின்போது அவரது கால் உடைந்து விட்டது. இந்த நேரத்தில் ஒன்றரை வருடம் கமலை ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். அப்போது கமலைப் பார்க்க வந்த பாலமுரளிகிருஷ்ணா இந்த டைமை நீ வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லி அவருக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதனால் அவர் ஒரு சிறந்த பாடகராக ஆகவும் முடிந்தது.

Antharangam kamal

1975ல் அந்தரங்கம் படப்படிப்பின்போது கமல் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்தார் இயக்குனர் முக்தா சீனிவாசன். அதே படத்தில் தேவராஜன் இசையில் கமலை ஞாயிறு ஒளி மழையில் பாட வைத்தார். அதுதான் கமலுக்கு முதல் பாடல். அதன்பின் 1977ல் மலையாளத்தில் 2 படங்களுக்குப் பாடல்கள் பாடினார். 1978ல் முதன்முதலாக இளையராஜா அவள் அப்படித்தான் என்ற படத்தில் கமலைப் பாட வைத்தார்.

கங்கை அமரன் எழுதிய பன்னீர் புஷ்பங்களே பாடல் தான் அது. அதே வருஷத்தில் வாலி எழுத சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை என்ற பாடலையும் இளையராஜா பாட வைத்தார். 1980ல் சங்கர் கணேஷ் இசையமைப்பாளர்கள் மரியா மை டார்லிங் என்ற படத்தில் கமலை கொஞ்சம் பாஸ்ட்டான சாங்கைப் பாட வைத்தனர்.

ராசாத்தி உன்னைப் பார்க்க ஆசை வச்சேன்டி என்ற பாடலைப் பாடினார். அதே படம் கன்னடத்தில் வரும்போது இந்தப்பாடலை கன்னடத்தில் பாடி அசத்தினார். 1980ல் சரணம் ஐயப்பா என்ற படத்தில் அண்ணா வாடா என்ற நாட்டுப்புறப்பாடலை சந்திரபோஸ் இசையில் பாடினார். 1981ல் மீண்டும் இளையராஜாவின் இசையில் ராஜபார்வை படத்திற்காக விழியோரத்துக் கனவு என்ற பாடலை சோகம் சொட்டச் சொட்டப் பாடியுள்ளார்.

1981ல் கண்ணதாசன் இசையில் சவால் என்ற படத்தில் குடித்து விட்டுப் பாடுவது போல பாடி அசத்தியிருந்தார். கண்ணதாசன் எழுதிய தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும் என்ற பாடல் தான் அது. 1982ல் வெளியான மூன்றாம்பிறை படத்தில் வேடிக்கையான நரிக்கதை பாடலைப் பாடினார்.

இந்தப்பாடலை எழுதியவர் வைரமுத்து. டயலாக்குடன் வரும் இந்தப்பாடலில் பல குரல்களில் பாடியிருந்தார். இதே படத்தின் இந்தி ரீமேக்கில் கமலே பாடி அசத்தினார். இந்தியில் பாடிய முதல் படம் இதுதான். 1985ல் வெளியான ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் குரலை மாற்றி அந்தக் கதாபாத்திரத்திற்கேற்ப ஒரு பாடலை பாடி மிரட்டியிருப்பார். அதுதான் எம்மம்மோவ் எப்பப்போவ் ஊரா உலகமா… பாடல்.

1985 முதல் 1995 வரை கிட்டத்தட்ட 10 வருடங்கள் தொடர்ந்து இளையராஜாவுக்கு மட்டும் 21 பாடல்கள் பாடியுள்ளார் கமல். விக்ரம்….விக்ரம், தொட்டுக்கவா, கட்டிக்கவா, தென்பாண்டிச் சீமையிலே, போட்டா படியுது படியுது என பல சூப்பர்ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார். கமலுக்கு இவ்வளவு பாடல்களைக் கொடுத்த இளையராஜா அதற்குக் காரணம் கமல் ஒரு பாடகர் என்பதையும் தாண்டி அவருக்குள் ஒரு மியூசிக் டைரக்டரும் இருக்கிறார் என்று சொன்னது தான் ஹைலைட்.

கமல் கதையில் சாங்கோட சிட்டியுவேஷனை விவரிக்கிற விதம் தான் என்னால் வித்தியாசமான டியூன்களைத் தர முடிந்தது என்றார் இளையராஜா. 1992ல் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே என்ற பாடல் சிங்காரவேலன் படத்திற்காக பாடி அசத்தியிருந்தார்.

அப்படி வந்தது தான் குணா படப் பாடல். கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் மடல்…என்ற பாடல். இது கமலின் குரலில் வந்தது இன்னும் சிறப்பாக அமைந்தது. பல பெரிய பெரிய பாடகர்கள் பாடியும் திருப்தி வராத இளையராஜா கமலை வைத்து சில பாடல்களைப் பாட வைத்தார். அப்படி உருவானது தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ராஜா கைய வைச்சா பாடல். இந்தப்பாடலை முதலில் எஸ்பிபியை வைத்துத் தான் இளையராஜா ரெக்கார்ட் பண்ணினார். அது திருப்தி இல்லாததால் கமலை வைத்து மீண்டும் பாடலை உருவாக்கினார்.

இதே மாதிரி உருவான இன்னொரு பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் சுந்தரி நீயும்…சுந்தரன் ஞானும்…என்ற பாடல். இதை முதலில் ஜேசுதாஸ் தான் பாடுவதாக இருந்தது. இந்தப்பாடலை மலையாளி பாடினால் எப்படி இருக்குமோ அதே போல் சங்கதியுடன் பாடி அசத்தியிருப்பார். சிங்காரன் வேலன் படத்தில் செமயான ஒரு பாடல். அது வாலி வரிகளில் வெளியான ஹைபிட்சில் கமல் பாடிய போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி பாடல் தான். இன்றும் கேட்டு ரசிக்கத் தூண்டும் பாடல் இது. இன்று வரை இந்தப்பாடலை எவராலும் பாட முடியாது. மேடைக்கச்சேரிகளிலும் பாடத் தயங்கும் பாடல் இது.

தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல் இன்னும் நம் காதுக்குள் ரீங்காரமிடும். இது போல டயலாக் பாடலை கமலைத் தவிர இந்தியாவிலேயே பாடுவதற்கு ஆள் கிடையாது. அது போல் வெளியான ஒரு பாடல் தான் சதிலீலாவதி படத்தில் வந்த மாறுகோ மாறுகோ மாறுகயீ பாடல்.

kamal sing

கமல் படங்களில் சோகப்பாடல் என்றால் இளையராஜா கமலையே பாட வைத்து விடுவார். மகாநதி படத்தில் வரும் தன்மானம் உள்ள நெஞ்சம் பாடலைக் கேட்டால் இப்போதும் புல்லரிக்கும். அவ்வை சண்முகியில் தேவாவின் இன்னிசையில் வெளியான ருக்கு ருக்கு ருக்கு என்ற பாடலை பாட்டியின் குரலில் பாடி அசத்தியிருந்தார் கமல். மிமிக்ரி பண்ணி பேசுவதே கடினம் என்று இருக்க, கமல் அதில் புகுந்து பாடி விளையாடியிருப்பார். இந்தியிலும் இதே படத்திற்கு இந்தப்பாடலை ஆஷா போன்ஸ்லேயில் பாடி அசத்தியிருந்தார்.

1997ல் கார்த்திக் ராஜாவின் இசையில் உல்லாசம் படத்திற்காக அஜீத்குமாருக்கு முத்தே முத்தம்மா என்ற பாடலைப் பாடினார். 1998ல் காதலா காதலா படத்தில் கமலை 4 பாடல்கள் பாட வைத்தார் கார்;த்திக் ராஜா. காசு மேலே காசு வந்து என்ற பாடல். இந்தப் பாடல் சென்னைத் தமிழில் உதித்நாராயணனுடன் வேற லெவலில் பாடியிருந்தார் கமல். இதே படத்தில் வரும் மடோனா மாடலா நீ என்ற பாடல் செம ஸ்டைலாக பாடியிருந்தார் கமல்.

இந்தப்பாடலில் ஹரிஹரனுக்கு டப் கொடுத்துப் பாடியிருந்தார் கமல். 2000ல் வெளியான ஹேராம் படத்தில் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை ஹைபிட்ச்சில் பாடியிருந்தார். ஷாருக்கானுக்காக ஹரிஹரன் குரல் கொடுத்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் தெனாலி படத்தில் கமலை 2 பாடல்கள் பாட வைத்தார்.

ஆலங்கட்டி மழை, இஞ்ஞாருங்கோ ஆகிய பாடல்கள் தான் அவை. ஆளவந்தான் படத்தில் நந்து கேரக்டருக்காக கத்தி கத்தி ஒரு பாடலை எனர்ஜியுடன் பாடியுள்ளார். அதுதான் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்ற பாடல். சிரி சிரி சிரி சிரி என்ற பாடலை வேற லெவலில் வேற மாடுலேஷனில் பாடி பிரமிக்க வைத்திருப்பார்.

மீண்டும் தேவா இசையில் பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களுக்காக 3 பாடல்களைப் பாடியுள்ளார் கமல். கந்தசாமியேய்…, வந்தேன் வந்தேன், காதல் பிரியாமல் ஆகிய பாடல்கள் தான் அவை. வித்யாசாகர் கமலுடன் இணைந்த முதல் படம் அன்பேசிவம். இதில் கமல் 3 பாடல்கள் பாடியுள்ளார். நாட்டுக்கொரு சேதி சொல்ல பாடல் பிளாஷ்பேக் கமலுக்காக இளமை பொங்க பாடியுள்ளார். ஏலே மச்சி மச்சி என்ற பாடல் வேற லெவலில் இருக்கும். அதே போல் அன்பே சிவம் பாடல். இது ஹைபிட்சில் அமைந்திருக்கும்.

2003 ல் வெளியான பரத்வாஜ் இசையில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பாடிய ஆழ்வார் பேட்டை ஆளுடா என்ற பாடல்., கலக்கப்போவது யாரு என்ற பாடல் இரண்டுமே செமயாக இருந்தது. நளதமயந்தி படத்தில் முழு பாடலையும் ஆங்கிலத்திலேயே பாடி அசத்தியிருந்தார் கமல். 2004ல் கமல் ராஜாவுடன் மீண்டும் இணைந்தார். அதுதான் விருமான்டி. உன்னைவிட…என்ற அந்தப்பாடலை இப்போது கேட்டாலும் மெய்மறக்கச் செய்யும்.

pathala pathala

இதே படத்தில் கொம்புல பூவ சுத்தி பாடல் வேற லெவல் வாய்சில் பாடி அசத்தியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் புதுப்பேட்டை படத்தில் தனுஷ_க்கு நெருப்புடா என்ற பாடலைப் பாடியிருந்தார். ஹிமேஷ் ரேஷ்மியா இசையில் தசாவதாரம் படத்தில் முதிர்ந்த கிழவியின் குரலில் பாடிய முகுந்தா முகுந்தா பாடலை எந்த ஒரு பாடகராலும் பாட முடியாது என்றே சொல்லலாம்.

2010 ல்மன்மதன் அம்பு படத்தில் திரிஷாவுடன் பாடிய டயலாக் பாடல் தகுடு தத்தோம், நீல வானம் ஆகிய பாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ரகங்கள். சங்கர் எசான் லாய் இசையில் விஸ்வரூபம் படத்திற்காக ஒரு சூப்பர்ஹிட் பாடலைப் பாடினார். அதுதான் உன்னைக் காணாத நாள் என்ற பாடலில் முதல் வரிகளைக் கமல் பாடி தெறிக்க விட்டு இருப்பார். சங்கர் மகாதேவன் தான் இந்தப்பாடலைப் பாடியிருந்தார்.

உத்தமவில்லன், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய 3 படங்களில் கமலை வித்தியாசமாக நிறையப் பாடல்களைப் பாட வைத்தார் இசை அமைப்பாளர் ஜிப்ரான். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இளையராஜா இசை மழையில் தெற்கத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா என்ற பாடலைப் பாடினார் கமல். அவம் படத்தில் சுந்தரமூர்த்தி இசையில் காரிருளே என்று ஒரு பாடலைப் பாடியுள்ளார். அனிருத் இசையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை இப்போதும் செம மாஸான ஹிட்டாக்கியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top