டபுள் பாசிட்டிவ் என்றால் என்ன?? இப்படி ஒரு வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா??
தொழில்நுட்பம் என்பது அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்றார் போலவும் காலத்திற்கு ஏற்றார் போலவும் மாறக்கூடிய ஒன்று. அறிவியலை அடிப்படையாக வைத்தே சினிமாத்துறை இயங்கி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
சினிமா என்ற தொழில்நுட்பம் உருவான காலகட்டத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஒன்றாகவும் பயம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் சினிமா இருந்தது. 1896 ஆம் ஆண்டு லூமியர் பிரதர்ஸின் “தி அரைவல் ஆஃப் எ டிரைன்” என்ற நகரும் படம் திரையிடப்பட்டது. அதில் ரயில் வேகமாக வரும் காட்சியை பார்த்த ரசிகர்கள் தெறித்து ஓடினார்களாம். இவ்வாறு பயங்கரமான ஒன்றாக இருந்த சினிமா, அதன் பின் மக்களின் அன்றாட வாழ்வில் ஒன்றாக கலந்துப்போனது.
அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை சினிமா தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துகொண்டே இருப்பது கண்கூடு. குறிப்பாக கேமரா, எடிட்டிங்க் தொழில்நுட்பங்களை உதாரணமாக கூறலாம். முன்பெல்லாம் படச்சுருளைக் பயன்படுத்தித்தான் கேமராவில் படமெடுக்கமுடியும். இப்போது அது டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது. அது போல் எடிட்டிங்கை எடுத்துக்கொண்டால், நான் லீனியர் எடிட்டிங்க், லீனியர் எடிட்டிங்க் என்று இருவகைப் படுத்தலாம்.
படச்சுருளை கொண்டு படமெடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் டபுள் பாஸிட்டிவ் என்ற வார்த்தை மிகவும் பிரபலமான வார்த்தையாக இருந்தது. இப்போது கூட அந்த வார்த்தை சினிமாத்துறையில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் டபுள் பாஸிட்டிவ் என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
படச்சுருளை கொண்டு படம் எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த படச்சுருளை நெகட்டிவ் என்று கூறுவார்கள். படத்தில் இடம்பெறும் ஒலிக்கு ஒரு நெகட்டிவ் இருக்கும், ஒளிக்கு இன்னொரு நெகட்டிவ் இருக்கும்.
படம் எடுத்து முடித்தப்பிறகு அந்த நெகட்டிவ்களை பாஸிட்டிவ்களாக மாற்றுவார்கள். அதன் பின் அந்த இரண்டு பாஸிட்டிவ்களும் ஒன்றாக இணைந்துதான் திரைப்படமாக ஓடும். இதற்கு பெயர்தான் டபுள் பாஸிட்டிவ். அதாவது பின்னணி இசை சேர்ப்பதற்கு முன்பு படக்குழுவினர் அந்த படத்தை திரையிட்டு பார்ப்பார்கள். அதனை டபுள் பாஸிட்டிவ் பார்ப்பது என்று கூறுவார்கள்.