முதலிடத்தில் தெலுங்கு சினிமா!.. 6ம் இடத்தில் தமிழ் சினிமா!.. கோலிவுட்டுக்கு என்னாச்சி?!...

by சிவா |
telugu
X

#image_title

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு மொழிகள் சினிமா துறையில் அதிக வளர்ச்சியை கொண்டிருக்கிறது. அதேநேரம், சமீபகாலமாக கன்னட மற்றும் மலையாள படங்களும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியை கண்டிருக்கிறது. கன்னடத்தில் உருவான கேஜிஎப், கேஜிஎப் 2 போன்ற படங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டு தமிழகத்திலும் நன்றாக ஓடி வசூலை பெற்றது.

மலையாள திரைப்படங்கள் மிகவும் இயல்பான கதையை கொண்ட படங்களாக உருவாகி வருகிறது. ஆனால், அந்த மொழியிலும் இப்போது மார்கோ போன்ற படங்கள் உருவாக துவங்கிவிட்டது. ஒருபக்கம் பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா 2 போன்ற தெலுங்கு படங்கள் தமிழ், ஹிந்தி, மலையாள மொழிகளிலும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்திய சினிமாவில் இதுவரை அதிக வசூல் பெற்ற படமாக புஷ்பா 2 என்கிற தெலுங்கு படம்தான் இருக்கிறது. சுமார் 1700 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. இதற்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி 1300 கோடி வசூல் செய்த ஜவான் என்கிற ஹிந்தி படம் இருக்கிறது.

pushpa 2

pushpa 2

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் 1000 கோடி வசூலை எட்டவில்லை. ஜெயிலர் 700 கோடி வரை வசூல் செய்ததே அதிக பட்ச வசூலாக இருக்கிறது. கங்குவா படம் 2 ஆயிரம் கோடி அடிக்கும் என உதார் விட்டார்கள். படமோ பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்துவிட்டது. வசூல் மன்னனாக இருந்த விஜயும் அரசியலுக்கு போய்விட்டார். எனவே, அதிக வசூலுக்கு ரஜினி, அஜித் படங்களைத்தான் கோலிவுட் நம்பியிருக்கிறது.

ஆனால், தெலுங்கு சினிமாக்கள் அசால்ட்டாக ஆயிரம் கோடி வசூலை வசூல் செய்து விடுகிறது. தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெறுவதில்லை. ஆனால், தெலுங்கு படங்கள் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் ஓடுகிறது. பேன் இண்டியா அளவுக்கு இன்னும் தமிழ் சினிமா உயரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. எம்புரான் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரித்திவிராஜ் தெலுங்கு சினிமா உச்சத்தில் இருப்பதாக பேசியிருக்கிறார்.

மேலும், சின்னக்கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற படங்களை இயக்கிய சீனியர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘தெலுங்கு சினிமா நம்பர் ஒன் இடத்திலும், மலையாள சினிமா 2ம் இடத்திலும் இருக்கிறது. தமிழ் சினிமா 6வது இடத்திற்கு போய்விட்டது. சரியான தயாரிப்பாளர் இல்லாததே தமிழ் சினிமாவின் பின்னடைவிற்கு காரணம்’ என சொல்லியிருக்கிறார்.

கோலிவுட்டை பொறுத்தவரை லைக்கா நிறுவனம் பெரிய நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் அந்நிறுவனம் தயாரித்து வெளியான தர்பார், இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன், விடாமுயற்சி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. எனவே, அந்நிறுவனம் தொடர்ந்து படம் எடுக்குமா என்பதே தெரியவில்லை.

முன்பெல்லாம் தமிழ் சினிமா நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட சினிமா துறையினர் கோலிவுட்டை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். கோலிவுட்டிலிருந்து இயக்குனர்கள் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவுக்கு போய் படங்களை இயக்கி வந்தார்கள். ஆனால், இப்போது இது தலைகீழாக மாறிவிட்டது. தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற நடிகர்கள் தெலுங்கு பட இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்கள்.

தமிழ் சினிமா முன்னேற வேண்டுமெனில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகும்படி இயக்குனர்கள் படமெடுக்க வேண்டும். பேன் இண்டியா அளவிலும் தமிழ் படங்கள் ஓடி அதிக வசூலை பெற வேண்டும். இது எல்லாம் நடந்தால் மட்டுமே கோலிவுட் தெலுங்கு சினிமாவுக்கு டஃப் கொடுக்கும் படி மாறும். இல்லையெனில் இன்னும் கீழே போகவும் வாய்ப்புண்டு!...

Next Story