Thug life: தமிழ் சினிமா மட்டுமில்லை. இந்திய சினிமாவிலேயே முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். பாம்பே, ரோஜா போன்ற பரபரப்பான கதைகளை இயக்கியவர். கமலை வைத்து நாயகன், ரஜினியை வைத்து தளபதி படங்களை இயக்கியவர். இதயத்தை திருடாதே, அலை பாயுதே, ஓகே கண்மணி போல காதல் ரசம் கொட்டும் படங்களையும் இயக்குவார்.
தளபதி, நாயகன், செக்க சிவந்த வானம் போன்ற கேங்ஸ்டர் படங்களையும் இயக்குவார். இப்போதுள்ள பல இயக்குனர்கள் மணிரத்னத்தின் ரசிகராக இருப்பவர்கள்தான். எம்.ஜி.ஆர், கமலே முயன்று எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்து காட்டி வெற்றி பெற்றும் காட்டினார்.
இப்போது கமல், சிம்புவை வைத்து தக் லைப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 37 வருடங்களுக்கு பின் கமலும் மணிரத்னமும் இப்போது மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறதாம். படம் அறிவிப்பு வெளியானபோது புரமோஷன் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சிங்குச்சா’ பாடலை முதலில் வருகிற 25ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அதன்பின் 18ம் தேதியான நாளை வெளியிடவிருக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில் கமல், மணிரத்னம் இருவருமே பகுத்தறிவு வாதிகள் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள். மணிரத்னம் தான் படமெடுக்கும்போது முதல் நாள் கேமராவில் கற்பூரம் காட்டுவது, கடைசி நாள் பூசணிக்காய் உடைப்பது என எதையுமே அனுமதிக்க மாட்டாராம்.
ஆனால், ஏற்கனவே முடிவு செய்த ஏப்ரல் 25ம் தேதியும் சரி, 18ம் தேதியும் சரி இரண்டுமே முகூர்த்த தினங்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில், இப்படத்தை இணைந்து தயாரிக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் பகுத்தறிவு குடும்பத்தை சேர்ந்த நிறுவனம்தான். இப்படி எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக இருக்க யார் முகூர்த்த நாளான ஏப்ரல் 18ம் தேதியை ஃபிக்ஸ் செய்தார்கள் என தெரியவில்லை.