இயக்குநர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடும் அஜித்?... ஒரு தீவிர அலசல்!

ஒரு படம் நடிக்கும்போதே அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கும் சென்று விட்டார் அஜித். அவரது திரைவாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.

இதைப்பார்த்து ஒருபுறம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் தீவிர கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் அவர்களை அந்தளவு கவரவில்லை என்பது தான் காரணம்.

சற்றே குண்டாக பூப்போட்டது போன்ற பச்சை நிற சட்டையில் மூன்று விதமான அஜித்கள் நிற்பது போல படக்குழு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கின்றனர். அவரது வலது கை விரலில் ஓட்டுப்போட்ட மை இருப்பதால் கண்டிப்பாக இது படத்திற்காக எடுக்கப்பட்ட ஷூட் தான் என்பது தெரிகிறது.

என்றாலும் தாங்கள் நினைத்தது போல இந்த பர்ஸ்ட் லுக் இல்லை என அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் சுரேஷ் சந்திராவை வச்சு செய்கின்றனர். ஏனெனில் இந்த குழப்பங்கள் பெரும்பாலும் அவர் தான் காரணம்.

கடந்த 1௦ வருடங்களில் சிவா, வினோத் என இரண்டு இயக்குநர்கள் படங்களில் மட்டுமே அஜித் நடித்துள்ளார். அதிசயமாக மகிழ் திருமேனியுடன் இணைந்து அவரைக் கைகழுவி விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் பக்கம் அஜித் பார்வையை திருப்பி இருக்கிறார்.

இதைப்பார்த்த இயக்குநர்கள் இயக்குநர்கள் வாழ்க்கையில் அஜித் தொடர்ந்து விளையாடுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதுகுறித்து விரிவாக இங்கே காணலாம்.

ஹாலிவுட்

உலகின் மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகும் ஹாலிவுட்டில் ஒரு குறிப்பிட்ட சீரிஸ் படங்கள் எடுப்பது வழக்கம். அப்போதும் கூட இயக்குநர் உள்ளிட்டவர்கள் மாறிக்கொண்டு இருப்பார்கள். அதேபோல இங்கும் அஜித் முயற்சி செய்கிறார். எப்படி என்றால் தனக்கு செட் ஆகும் இயக்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்கிறார். இது அவரை பாதிக்கிறதோ இல்லையோ அவரது தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களை அதிகம் பாதிக்கிறது.

சிறுத்தை சிவா - வினோத்

கமர்ஷியல் படங்களை அளித்த சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்கள் செய்தார் அஜித். விவேகம் படத்துடன் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. கதைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை மேற்கொண்டார். அஜித் தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு போய் விட்டார். ஆனால் வினோத் இன்னும் எந்த புது படத்திலும் கமிட் ஆகவில்லை.

தீரன் அதிகாரம் ஒன்று

தீரன் போன்ற படத்தினை எடுத்த வினோத் எப்படி துணிவு போன்ற லாஜிக் குறைவான ஒரு படத்தினை இயக்கினார்? என்பது இன்று வரை தீராத ஆச்சரியம் தான். வலிமை அப்படியே விடிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். அதில் பேமிலி செண்டிமெண்டை கலந்து ஆக்ஷன் படமா? இல்லை பேமிலி படமா? என்றே தெரியாமல் போய் விட்டது. இன்னொரு முறை இந்த கூட்டணி இணையாமல் இருந்தால் அது வினோத்திற்கு ரொம்ப நல்லது.

மகிழ் திருமேனி

தடையறத் தாக்க, மீகாமன், தடம் என ரசிகர்கள் கொண்டாடும் வகையில் நல்ல படங்களை எடுத்தவர் மகிழ் திருமேனி. குறிப்பாக இவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைக்கும். சினிமாவை பொறுத்தவரை இயக்குநர்களுக்கு கிடைப்பது ஒரு குறிப்பிட்ட காலம் தான். அதிகபட்சம் ஒரு பத்து வருடங்கள் நிலைத்திருக்கலாம். இப்படிப்பட்ட பொன்னான காலத்தில் தமிழ் சினிமாவில் நன்கு வளர வேண்டிய மகிழ் திருமேனி தற்போது விடாமுயற்சி வலையில் சிக்கிக்கொண்டு தன்னுடைய எதிர்காலத்தை வீணடித்து வருகிறார். இதில் இருந்து அவர் எப்போது மீண்டு வருவார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சுரேஷ் சந்திரா

அஜித்தின் ஆரம்ப காலத்தில் இருந்து கூட இருப்பவர் என்பதால் அஜித்திற்கு சுரேஷ் மீது பாசம் அதிகம். தன்னுடைய குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கினைக் கூட சுரேஷ் சந்திராவின் பிறந்தநாளில் தான் ஆரம்பித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த சுரேஷ் சந்திரா தான் தற்போது பெரிய வேலையாக பார்த்து விட்டார். முதலில் விக்னேஷ் சிவன் தான் அஜித்தை இயக்குவதாக இருந்தது.

விக்னேஷ் சிவன்

நயன்தாரா-அஜித் இருவருக்கும் நல்ல ஒரு பிரெண்ட்ஷிப் இருந்ததாலும் விக்னேஷ் சிவன் அஜித் மீது வைத்திருந்த மரியாதையாலும் இந்த கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகி விட்டது.அஜித் லைகா நிறுவனத்திற்கு தேதி கொடுத்து விட்டார். விக்னேஷ் சிவன்-அனிருத்-அஜித் என கூட்டணியும் உறுதியானது. கடைசியில் என்ன நடந்தது என தெரியவில்லை. அஜித் திடீரென விக்னேஷ் சிவன் வேண்டாம் வேறு இயக்குநர் பாருங்கள் என அன்புக்கட்டளை போட்டு விட்டார்.

நீரவ் ஷா - மகிழ் திருமேனி

அஜித்தின் வார்த்தையை மீற முடியாது என்பதால் வேறு இயக்குநரை வலைவீசித் தேடி வந்தார்கள். அந்த நேரம் சுரேஷ் சந்திரா மகிழ் திருமேனியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி அஜித் சம்மதத்தை பெற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அவரை அவர் பாட்டுக்கு வேலை செய்ய விட்டிருந்தால் படம் இந்நேரம் வெளியாகி இருக்கும். அஜித் தரப்பின் தேவை இல்லாத தலையிடல்கள், இடையில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா -மகிழ் திருமேனி இடையிலான சண்டை என படத்தின் ஷூட்டிங் இழுத்துக்கொண்டே சென்றது.

விடாமுயற்சி

இதில் காமெடி என்னவென்றால் படம் முழுவதும் வெளிநாட்டில் தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என அஜித் போட்ட ஆர்டர் காரணமாக, அஜர்பைஜானின் கொளுத்தும் வெயிலில் கார் சேஸிங் உள்ளிட்ட முக்கிய காட்சிகளை படக்குழு படம் பிடித்துள்ளனர். ஆனால் எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்த போது படமாக பாதி கூட தேறவில்லையாம். பட்ஜெட்டில் ஏறக்குறைய பாதிக்கு மேல் செலவு செய்தும் கூட இது நடந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லைகா

இதைக் கேட்டு லைகாவே ஸ்தம்பித்துப் போய் விட்டது. ஏனெனில் ஒரே நேரத்தில் இந்தியன், வேட்டையன், விடாமுயற்சி என தமிழின் முக்கிய நடிகர்களை வைத்து லைகா நிறுவனத்தினர் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்தியன் 2-விற்கு ஷங்கர் தாராளமாக செலவு செய்ய லைகா தள்ளாட ஆரம்பித்து விட்டது. ஷங்கர் போல அஜித்தும் பட்ஜெட்டை இழுத்து விட்டுள்ளார். இதனால் தான் விடாமுயற்சி குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் லைகா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

ஆக்ஸிடென்ட்

இதற்கு மேல் படத்தின் ஷூட்டிங்கிற்கு உதவ முடியாது என லைகா கைவிரித்து விட அந்த கடுப்பில் தான் அஜித்-ஆரவ் ஆக்ஸிடென்ட் காட்சிகளை அவசரமாக சுரேஷ் சந்திரா ரிலீஸ் செய்தார். ஆனால் அது அவர்களுக்கே பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. படப்பிடிப்பு இவ்வளவு நவீனத்துவம் அடைந்த பின்னரும் தான் மட்டுமின்றி சக நடிகரையும் ஆபத்தில் அஜித் மாட்டிவிடக் காரணம் என்ன? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விட்டனர்.

பேச்சுவார்த்தை

படம் ஒரு வருடம் தாண்டியும் இழுத்துக்கொண்டே செல்வதால் சமீபத்தில் அஜித்-லைகா தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் சம்பளத்தில் இருந்து சுமார் 2௦% வரை அஜித் விட்டுக்கொடுக்க வேண்டும் என லைகா கண்டிஷன் போட்டதாம். அந்த கடுப்பில் தான் அஜித் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு பிரியாணி கிண்டப்போனாராம். இதனால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் விடாமுயற்சி அந்தரத்தில் தொங்குகிறது.

நல்ல மனிதர்

இப்படித்தான் ஒரு மனிதர் வாழ வேண்டும் என்பதற்கு ஏற்ப அஜித் வாழ்ந்து வருகிறார். குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் ஆகியோருக்கு நேரத்தை ஒதுக்குகிறார். தனக்கு பிடித்த பைக் சாகசங்களை செய்கிறார். அதே நேரம் தன்னை நம்பும் தயாரிப்பாளர், இயக்குநர்களையும் காப்பாற்ற வேண்டியது அவர் கடமை தான். குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை முடிப்பது அவருக்கும் ஏன் அவரது தீவிர ரசிகர்களுக்கும் கூட நல்ல விஷயம் தான்.

கம்பர்ட் ஸோன்

அதை விடுத்து தன்னுடைய கம்பர்ட் ஸோனிற்காக படங்களின் ஷூட்டிங்கினை இழுத்துக்கொண்டே செல்வது, கதை விவாதங்களில் தலையிடுவது, தொடர்ந்து ஒரே இயக்குநருடன் படம் செய்வது போன்ற விஷயங்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் அவரது படங்களின் வசூலைத்தான் அவை காவு வாங்கும். எனவே இனிவரும் காலங்களிலாவது இந்த விஷயத்தில் தமிழின் மூத்த நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரை அஜித் பின்பற்றுவது அனைவருக்குமே நல்லது.

ஆதிக் ரவிச்சந்திரன்

லைகாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அஜித் தன்னுடைய பேன் பாய் இயக்குநர் ஆதிக்கிற்கு உடனே கால்ஷீட் கொடுத்து குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு விட்டார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு தரப்பும் தைரியமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட்டை கட்டுக்குள் வைத்து ஆதிக்கை சுதந்திரமாக அஜித் படம் எடுக்க விட்டால் கண்டிப்பாக படம் சொன்ன தேதியில் வெளியாகும்.அப்படி நடந்தால் அஜித் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயம் தான். குட் பேட் அக்லி பொங்கலுக்கு வெளியாகுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Related Articles

Next Story