தமிழ் திரையுலகில் விக்ரமுக்கு பெரிய இடைவெளி வந்தது ஏன் தெரியுமா?
நடிகர் விக்ரம் தமிழ்சினிமா நடிகர்களில் எந்தவிதமான பேக்ரவுண்டும் இல்லாமல் சுயமாக முன்னுக்கு வந்தவர். ஆரம்பகால கட்டங்களில் படிப்பு முடித்ததும் சினிமா மோகம் கொண்டு பல இடங்களில் வாய்ப்புக்காக தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்குக் கிடைத்ததோ விளம்பரப் படங்கள் தான்.
1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் தான் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர். 2வது படம் தந்து விட்டேன் என்னை. 3வது படம் மீரா. இந்தப்படம் 1992ல் வந்தது. அடுத்து இவருக்கு பெரிய இடைவெளி வந்தது. தொடர்ந்து தமிழ்சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் தெலுங்கு, மலையாளப்படங்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
அதன்பின்னரும் அவர் சும்மா இருக்கவில்லை. டப்பிங் கொடுத்தாவது சினிமாவில் பெரிய ஆளாக வந்து விட வேண்டும் என்று துடித்தார். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருந்தால் தான் சினிமாவில் 4 டைரக்டர்களின் அறிமகமாவது கிடைக்கும் என்று நினைத்து செயலில் இறங்கினார்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதாவது 1994ல் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு அமைந்த படம் தான் இயக்குனர் விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள். நீண்ட இடைவெளி என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்தக் கால கட்டங்களில் தான் ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சத்யராஜ், கார்த்திக், முரளி என அனைவரும் தமிழ்சினிமாவில் களம் கண்டு வெற்றியை சுவைத்தனர். இவர்களுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்த வண்ணம் இருந்தன.
2 ஆண்டுகள் இடைவெளி என்பது அப்போது நீண்ட இடைவெளி. இப்போதும் தான். இப்போது பெரிய பெரிய நடிகர்கள் கூட ஆண்டுக்கு ஒரு படமாவது நடித்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் புதிய மன்னர்கள் படமாவது தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த விக்ரமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த படமும் படுத்து விட்டது. அடுத்தும் அவர் துவண்டு விட வில்லை. திரும்பவும் தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு அடிக்கச் சென்று விட்டார்.
அதன்பின்னர் அவருக்கு விடிவெள்ளி போல வாழ்க்கையில் சிறு வெளிச்சம் தென்பட்டது. அந்தப் படம் தான் உல்லாசம். அஜீத்துடன் இணைந்து நடித்த இந்தப் படம் விக்ரமுக்கும் ரசிகர்கள் உருவாகக் காரணமானது. இதன்பிறகும் பெரிய கேப் வந்தது. அதன்பிறகு அவருக்கு வெற்றியை மட்டுமின்றி வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் எது என்றால் சேது.1999ல் வெளியானது.
இந்தப்படத்தில் இருந்து தான் தனக்குள் ஒளிந்து கிடந்த தூங்கிக் கொண்டு இருந்த நடிப்பு எனும் சிங்கத்தைத் தட்டி எழுப்பினார் விக்ரம். இந்தப்படத்திற்குப் பிறகு தான் விக்ரமுக்கு ச்சீயான் விக்ரம் என்ற பெயர் வந்தது. இந்தப் படத்திற்கு பிறகு தான் தான் படத்திற்குப் படம் தன்னை நம்பி திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு வித்தியாசமான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்கு முதலில் விதை போட்டவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இதன்பிறகு வந்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றி தான். ஒரு சில படங்களைத் தவிர.