முதன் முதலில் இந்தியில் பெரிய வெற்றியைக் கொடுத்த நடிகர் கமல் தான்...! தொடர்ந்து கோலூச்சாமல் போனது ஏன்னு தெரியுமா?
கமலும், ரஜினியும் தமிழில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்தியிலும் அவர்கள் பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால் அங்கு மட்டும் ஏன் தொடர்ந்து அவர்கள் காலூன்றவில்லை என்ற கேள்வி எழலாம். அதற்கான சில விவரங்களைப் பார்க்கலாம்.
80களில் இந்தி சினிமாவில் கமல் மட்டுமல்ல, ரஜினியும் தெறிக்கவிட்டார். அது ஒரு காலக்கட்டம் தான். அதை தொடர வேண்டும் என்றால் அவர்கள் தமிழ் சினிமாவை விட்டு சென்றிருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்க முடியாது. எவராக இருந்தாலும் கோலோச்சும் காலம் 10 வருடம் தான். அதற்கு மேல் இன்னொரு சூப்பர் ஸ்டார்.
60–70 களில் ராஜேஷ் கண்ணாவும், 70–75 களில் தேவ் ஆனந்த், தர்மேந்திராவும், 75–90 களில் அமிதாப் (டெர்மினேட்டர்), 90– 95 களில் சல்மான் கான் - கோவிந்தா, 95–2005 களில் ஷாரூக்கான், 2005 -2015 களில் ஆமீர் கான், 2015 - 2021 வரை சல்மான் கான் என இந்தியில் நடிகர்கள் கோலூச்சி வந்தனர்.
இவ்வளவு தான் பாலிவுட் 10 வருடங்களுக்கு மேல் நிலைப்பதே கடினம். கூலிக்கு பின் அமிதாப்பிற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பறிபோனது. அமீர் கான், சல்மான் கானிடம் மாட்டி முதல் இடத்திற்கு பல ஆண்டுகளாய் ஷாருக்கான் மல்லு கட்டுகிறார். ஆனாலும் அசால்டாக அவர்களின் மார்க்கட்டை பிடிக்க முடியாது.
பாலிவுட்டில் 75–87 வரை அமிதாப் படங்கள் ரிலீஸ் ஆனால் மற்ற நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. எங்கும் அமிதாப் படங்களே திரையிடப்படும். அமிதாப்பின் போட்டி நடிகர்கள் தர்மேந்திரா, தேவ் ஆனந்த், வினோத் கன்னா எல்லாம் நடிப்பதை குறைத்தனர்.
அந்த கால கட்டத்தில் பாலிவுட்டிற்கு புதிய நபர்கள், வித்தியாசமான நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது ரஜினியும் கமலும் பாலிவுட்டில் நுழைந்தனர். வேற்று மொழி நடிகர்களுக்கு இந்தியில் மவுசு உருவானது. இவர்களுக்கு போட்டியாக மிதுன் சக்கரவர்த்தியும் உள்ளே நுழைய பாலிவுட்டில் இந்திக்காரர்களுக்கு போட்டி ஏற்பட்டது. முதன் முதலில் இந்தியில் பெரிய வெற்றியை பெற்ற நடிகர் கமல் தான்.
இந்தி நடிகர்களில் நவரச நடிப்பிற்கும் கமலின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கும் வித்தியாசம் இருந்தது. ஏக் துஜே கேலியே, சனம் தெரி கஸம், சாகர், கிராப்தார் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தமிழில் கமலுக்கான இடம் பறிபோய்க் கொண்டிருந்தது.
மோகன், பாக்யராஜின் பெரிய வெற்றிகள் கமலை பதம் பார்த்தது. ரஜினிக்கும் இதே நிலை தான். அந்நேரத்தில் பாலிவுட்டில் புது ரத்தம் பாய்ச்ச ஆரம்பித்தனர். ரஜினி ஸ்டைலோடு கமலின் நடிப்பையும் அனில் கபூர் கொடுத்தார். அனில் கபூரின் பரட்டை தலையும் இயல்பான இந்திக்காரன் தோற்றமும் பெரிய வெற்றியை கொடுத்தது.
தமிழ் படங்களையே அவர் ரீமேக் செய்து நடிக்க கமல், ரஜினியின் மவுசு குறைய ஆரம்பித்தது. கமலின் வெற்றிப் படங்களில் ஆழமான காதல் கதைகளை பின்பற்றி சல்மான் நடிக்க தொடங்கினார். மிதுன் சக்ரவர்த்தியை போன்ற டான்ஸை கோவிந்தா கொடுக்க இந்திக்காரர்கள் வசம் மீண்டும் பாலிவுட் சென்றது.
கமல், ரஜினி தமிழில் ரீ எண்ட்ரீ கொடுத்தனர். தமிழ் சினிமாவின் மார்க்கட்டும் பாலிவுட்டிற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் அதை விட அதிக சம்பளம் இங்கயே வாங்கியதால் இந்தியை விட்டு விலகினார்கள்.
90களில் அனில் கபூர், கோவிந்தா, ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், சுனில் ஷெட்டி. அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் என்று இளம் நடிகர்கள் ரவுண்ட் கட்ட வேற்று மொழி நடிகர்கள் நடிக்க படம் கிடைக்கவில்லை.
கமலை விட சிறப்பாக அஜய்தேவ்கன், ஷாரூக் கான், அமீர்கான் போன்றோர் நடிப்பார்கள். கமலின் தமிழ் படமான இந்தியன் இந்தி டப்பிங்கில் பெரிய வெற்றியை பெற்றது. கமல் இந்தியில் பெற்ற வெற்றியை போல் இன்றைய தமிழ் நடிகர்கள் எவரும் பெறவில்லை. இந்தியை மட்டுமே நம்பியிருந்தால் மாதவனை போல் இரண்டும் கெட்டானாகி ஒன்றும் இல்லாமல் போயிருப்பார்.