திரையுலகில் ஜொலித்த பெண்கள் - இது மகளிர் தின ஸ்பெஷல்!..
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி. பெண்கள் இந்நாட்டின் கண்கள்.
ஆணுக்குப் பெண்ணிங்கு சரிநிகர் சமானமே என்ற கூற்றுக்கிணங்க பல துறைகளிலும் ஆணுக்கு சமமாக பெண்கள் சாதித்துக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சினிமாவிலும் சாதித்த பெண்கள் பற்றி பார்ப்போம்.
ஜெயலலிதா
அரசியல், சினிமா என இரண்டிலும் கோலூச்சி நின்றவர் ஜெயலலிதா. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப அவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் முதல்வராக இருந்து மக்களுக்குப் பல நல்ல திட்டங்களை வகுத்தார்.
ஆளுமைத்திறன் மிக்கவர். சினிமாவிலும் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், எங்கள் தங்கம், என் அண்ணன், ஒளிவிளக்கு, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, மாட்டுக்கார வேலன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு அபாரம்.
பானுமதி
ஆந்திராவைச் சேர்ந்த நடிகை, ஆளுமைத்திறன் மிக்கவர் தமிழ்சினிமாவில் முத்திரை பதித்தவர் பானுமதி.
தனது ஆற்றல்மிக்க சிறந்த நடிப்பால் பத்மஸ்ரீ, பத்மவிபூசன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். தமிழ்சினிமாவில் இவரது நடிப்பைப் பார்த்து வியக்காத ரசிகர்களே இல்லை எனலாம். தாய்மார்களின் பேராதரவைப் பெற்றவர்.
நல்ல தம்பி, ரத்னகுமார், மலைக்கள்ளன், கள்வனின் காதலி, அலிபாபாவும் 40 திருடர்களும், தாய்க்குப் பின் தாரம், மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, ராணி லலிதாங்கி, சாரங்கதாரா, நாடோடி மன்னன், அன்னை, கலை அரசி, பட்டத்து ராணி ஆகிய படங்கள் இவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம்.
இசையிலும் இவர் ஒரு மேதை. வாங்க சம்மந்தி வாங்க, இப்படியும் ஒரு பெண் ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ்நாடு இசைக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா
ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு சினிமாவில் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார். இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர். 2010ல் வெளியான துரோகி படம் தான் இவரது இயக்கத்தில் முதலில் வெளியானது.
அதன்பிறகு 2016ல் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று இவரைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. படம்னா இப்படி இருக்கணும்னு நிறைய பேரை சொல்ல வைத்தது. அடுத்து இவரது இயக்கத்தில் வெளியானது சூரரைப் போற்று படம். சூர்யாவின் நடிப்பில் வெளியானது.
இந்தப் படம் 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா என 5 தேசிய விருதுகளை அள்ளியது.
சுஹாசினி
கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி. நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக அவதாரங்களை எடுத்தவர். டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழிப்படங்களில் நடித்தவர்.
தமிழில் இந்திரா என்ற படத்தை இயக்கியுள்ளார். 1988ல் இவர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்தார். இவரது நடிப்பில் பல படங்கள் செம மாஸாக இருந்தன. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்துபைரவி ஆகிய படங்கள் முக்கியமானவை.
விஜயசாந்தி
ஆந்திராவைச் சேர்ந்தவர். பல படங்களில் ஹீரோவைப் போல அதிரடி கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். நடிகை மட்டுமல்ல. தேர்ந்த அரசியல்வாதியும்கூட.
தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் இவர் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
தேசியவிருது, 5 பிலிம்பேர் விருது. 4 நந்தி விருதுகளைப் பெற்றவர். 2003ல் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். தமிழ்ப்படங்களில் கல்லுக்குள் ஈரம், வைஜெயந்தி ஐபிஎஸ், இந்திரன் சந்திரன், மன்னன் படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இனிய மகளிர் தின (மார்ச் 8) நல்வாழ்த்துக்கள்.