அவமானங்களை கடந்து சாதித்த யேசுதாஸ்... தமிழில் முதன்முதலாக பாடிய பாடல் எது தெரியுமா?
59 வருடங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். கிறித்தவர் என்றாலும் ஜாதி, மதம், மொழிகளைக் கடந்தவர். தேசிய விருதை 8 முறை பெற்றுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என எல்லாருக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.
குரலால் எல்லோரையும் கட்டிப் போட்டவர். இவர் பாடிய பாடல்கள் படத்தில் இருந்தால் அந்தப் பாடலுக்காகவே திரும்ப திரும்ப அந்தப் படத்தைப் பார்த்த 80ஸ் கிட்ஸ்களும் உண்டு. அவர் தான் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். சினிமாவில் இவர் கால் பதிக்க பட்ட சிரமங்கள் மற்றும் வெற்றிகள் பற்றி பார்ப்போம்.
இதையும் படிங்க... விஜயகாந்தை வைத்து படமெடுத்த எம்.ஜி.ஆர் பட இயக்குனர்கள்!. அட இத்தனை பேரா!..
5வது வயதிலேயே சிறப்பாகப் பாடினாராம் யேசுதாஸ். பள்ளிகளில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் இவர் தான் வின்னர். கிறித்தவர் என்பதால் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுக்க மறுத்தார்களாம். கடும் போராட்டத்திற்குப் பிறகு கர்நாடக இசையை முறையாகக் கற்றுக்கொண்டார்.
செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் தங்கி கற்று வந்தாராம். ஆரம்பத்தில் திறமை இல்லாதவர் என பல இசை அமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டாராம். ஆரம்பத்தில் வெறும் தண்ணீரைக் குடித்துப் பசியைப் போக்கி சினிமாவில் பாட வாய்ப்பு தேடி அலைந்தாராம். 1962ல் மலையாள இயக்குனர் கேஎஸ்.ஆண்டனியின் அறிமுகத்தில் ஒரு மலையாளப்படத்தில் பாடினாராம். அந்தப் படத்தில் இவரது குரலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அந்த ஆண்டே தமிழ்ப்பட வாய்ப்பும் கிடைத்ததாம்.
1963ல் பொம்மை படத்தில் தான் முதன் முதலில் பாடினார். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலைப் பாடினார். ஆனால் படம் 1964ல் வெளியானது. அதே நேரம் 1963ல் கொஞ்சும் குமரி என்ற படத்தில் ஆசை வந்த பின்னே என்ற பாடலைப் பாடினார். இதுதான் முதலில் வெளிவந்தது.
காதலிக்க நேரமில்லை படத்தில் என்ன பார்வை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா என்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து விட்டன. பறக்கும் பாவை, மறக்க முடியுமா, துலாபாரம், அன்னை வேளாங்கன்னி என பல படங்களில் பாடினார். அதே நேரம் மலையாளப்படத்தில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி தேசிய விருதைப் பெற்றார்.
அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பாடினார். உரிமைக்குரல் படத்தில் விழியே கதை எழுது பாடலில் மாஸ் காட்டினார். 1975ல் பல்லாண்டு வாழ்க படத்தில் எல்லா பாடல்களையும் பாடி அசத்தினார். நாளை நமதே, நீதிக்குத் தலைவணங்கு படத்தில் இந்தப் பச்சைக்கிளிக்கொரு பாடலைப் பாடினார். டாக்டர் சிவா படத்தில் மலரே குறிஞ்சி மலரே ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார்.
இதையும் படிங்க... கோட் படம் விஜய் படமா? செக் வைத்த டாப் ஸ்டார் பிரசாந்த்… அடிக்கடி இப்படியே சொல்றாரே!
அவள் ஒரு தொடர்கதை படத்தில் தெய்வம் தந்த வீடு பாடல் இவரது புகழைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. சபரிமலை ஐயப்பனின் ஹரிவராசனம் பாடலைப் பாடி பக்தர்களின் ரசனைக்குரியவர் ஆனார். ஐயப்பனுக்கு மாலை போட்டும் சாதி, மதங்களைக் கடந்தவன் என நிரூபித்தார். எம்எஸ்.வி.யின் இசையில் அதிக பாடல்களைப் பாடினார். இளையராஜாவின் இசையில் தான் நிறைய பாடல்களைப் பாடி புகழ் பெற்றார்.
அவள் அப்படித்தான் படத்தில் உறவுகள் தொடர்கதை, முள்ளும் மலரும் படத்தில் செந்தாழம்பூவில், மூன்றாம்பிறை படத்தில் கண்ணே கலைமானே, புதுக்கவிதை படத்தில் வெள்ளைப்புறா ஒன்று, வாழ்வே மாயம் படத்தில் வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்.