இளையராஜாவின் மெட்டில் பிறந்த யுவனின் பாடல்... அப்போ 80ஸ்க்கு... இப்போ 2கே கிட்ஸ்க்கு... இதெப்படி இருக்கு?
80களில் இளையராஜா ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்த காலம். ஏ... ஆத்தா ஆத்தோரமா, வாடி என் கப்பக்கிழங்கு என டப்பாங்குத்துப் பாடல்களில் அமர்க்களம் செய்தார். அந்த வரிசையில் ஒரு பாடல் தான் அடி ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி என்ற பாடல்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான படம் நீங்கள் கேட்டவை. தியாகராஜனும், பானுசந்தரும் இணைந்து நடித்த படம்.
கலைப்படங்களாகவே எடுத்த பாலுமகேந்திரா ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமர்ஷியலாகவும் ஒரு படம் எடுத்தார். அதனால் அந்தப் படத்திற்கு அவர் நீங்கள் கேட்டவை என்றே பெயர் வைத்தார்.
படமும், பாடல்களும் சூப்பர்ஹிட். இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஜானகி. இந்தப் பாடல் முழுக்க முழுக்க இருவருமே தங்களது வசீகரக் குரலால் சேட்டைகள் செய்து இருப்பார்கள். உண்மையான காதலர்கள் கூட இவ்வளவு சேட்டையை செய்து இருக்க மாட்டார்கள்.
முதலில் இளையராஜா இந்தப் பாடலில் டிரம் மியூசிக், கிதார் போட்டு அடுத்ததாக கீபோர்டை வாசித்துக் கலக்கியிருப்பார். நாதஸ்வரம், ஷெனாய், பறை, தவில் என அனைத்து வாத்தியக்கருவிகளையும் வைத்து விளையாடி இருப்பார். இந்தப் பாடலை நாட்டுப்புற வரிசையில் பார்த்தால் அது போலவே இருக்கும். வெஸ்டர்ன் மியூசிக்கா என்று நினைத்தால் அப்படியே இருக்கும். எப்பேர்ப்பட்டவர்களையும் ஆட்டம் போட வைத்து விடும் இந்தப் பாடல்.
அதே வரிசையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தில் ஒரு பாடலைப் போட்டிருப்பார். சங்கர் மகாதேவனும், லெட்சுமி ஐயரும் இணைந்து பாடிய இந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருப்பார். இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். 2005ல் வெளியானது.
வா வா வா நீ வராங்காட்டி போ போ போ என்ற பாடல தான் அது. காதலனும், காதலியும் சின்ன பிள்ளைகளாக இருந்தால் எப்படி சேட்டை பண்ணியிருப்பார்கள் என்ற கற்பனையில் உருவான பாடல் இது. இந்தப் பாடலை உற்றுக்கவனித்தால் அடி ஏய் பாடலின் ராகத்தை பல்லவியிலேயே போட்டு இருப்பார் யுவன்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.