அப்பா இறப்புக்கு கடன் வாங்கிய விக்ரமன்!.. மணிவண்ணன் சொன்ன அந்த வார்த்தை!….

தமிழ் சினிமாவில் மிகவும் மென்மையான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரமன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புது வசந்தம். ஒரு பெண்ணுடன் 4 ஆண்கள் ஒரே இடத்தில் தங்கி நட்பாக பழக முடியும் என காட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் அதற்கு முன் அப்படி ஒரு கதையோடு ஒரு திரைப்படம் வந்தது இல்லை. எனவே, இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய் மீது நம்பிக்கை வைத்த முதல் இயக்குனர் விக்ரமன்தான். அப்படி உருவான படம்தான் பூவே உனக்காக. இந்த படத்தின் வெற்றிதான் விஜயை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோடு, அவருக்கு பல பெண் ரசிகைகளையும் உருவாக்கியது. சரத்குமாரை வைத்து சூர்ய வம்சம், விஜயகாந்தை வைத்து வானத்தை போல போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ படம் என்கிற பெருமையை சூர்ய வம்சம் பெற்றது.
உன்னை நினைத்து, மரியதை, சென்னை காதல் உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் படத்தில் பெரும்பாலும் எஸ்.ஜே.ராஜ்குமார் இசையமைத்திருக்கிறார். அந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில்தான் பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய தகவலை விக்ரமன் பகிர்ந்துகொண்டார்.
நான் இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டிருந்த நேரம் அது. இறந்துவிட்ட என் அப்பாவுக்கு காரியம் செய்ய வேண்டியிருந்த்து. குறைந்தபட்சம் அன்றைய தேதியில் எனக்கு 1500 பணம் வேண்டும். ஆனால், அந்த பணம் என்னிடம் இல்லை. ஏற்கனவே இயக்குனர் மணிவண்ணனை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கொடுத்திருந்தேன்.
எனவே, அவரிடம் போய் ‘அந்த கதையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு 1500 ரூபாய் பணம் மட்டும் கொடுங்கள்’ எனக்கேட்டேன். கோபப்பட்ட அவர் ‘எவ்வளவு நல்ல கதை. இதையின் விலை 1500 தானா?.. இந்த கதை உன்னுடையது. உனக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன்’ என சொல்லி அந்த பணத்தை கொடுத்தார்.
அதன்பின் நான் இயக்குனராகி என்னுடைய பல படங்களில் அவர் நடித்தார். திடீரென ஒரு நாள் அந்த சம்பவம் எனக்கு நியாபகத்திற்கு வர அவரிடம் ‘சார் நான் உங்களுக்கு 1500 பணம் கொடுக்க வேண்டும்’ என சொன்னேன். அவரோ ‘உன்னுடைய படங்களில் நடித்து இதுவரை நான் 75 லட்சம் சம்பாதித்துவிட்டேன். இந்த பிரபஞ்சம் நமக்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுக்கும். யார் மூலம் என்ன நடக்கும் என்பது தெரியாது. உனக்கு உதவ வேண்டும் என பிரபஞ்சம் விரும்பியிருக்கிறது’ என சொன்னாராம்.